நான் முதல்வன் திட்டம், அரசு லைப்ரரி, 4 வருட போராட்டம்… UPSC-ல் வென்ற பீடி தொழிலாளி மகள் இன்பா!

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பீடி சுற்றும் பெண்ணின் மகள், யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 851-வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவரின் வெற்றி அப்பகுதி மக்களையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஊர்க்காரர்களின் வாழ்த்து, தொலைபேசி அழைப்புகள், பத்திரிகை பேட்டி எனப் பரபரப்பாக இருந்தவரிடம் வெற்றி குறித்த அனுபவங்களைப் பகிரச் சொல்லி கேட்டோம்.

“தென்காசி மாவட்டம், செங்கோட்டை பக்கத்துல விஸ்வநாதபுரம்தான் சொந்த ஊரு. பத்தாவது வரை அரசுப் பள்ளியில படிச்சேன்.

இன்பா

ப்ளஸ் டூ முடிச்சதுக்கு அப்புறம் கோயம்புத்தூர்ல பி.இ. கம்ப்யூட்டர் இஞ்சினீயரிங் 2020-ல முடிச்சேன். படிச்சு முடிச்சதுல இருந்து தொடர்ந்து யூபிஎஸ்சி எக்ஸாம்க்கு படிக்க ஆரம்பிச்சிட்டேன்‌. இப்போ மூணாவது முயற்சியில தேர்வுகளை க்ளியர் பண்ணிருக்கேன். கொரோனா டைம்ல வீட்ல ஆன்லைன் கிளாஸ் மூலமாக படிச்சேன். கொரோனா தாக்கம் குறையவும், பக்கத்துல உள்ள கவர்மென்ட் லைப்ரரியை திறந்துட்டாங்க.

மதிய சாப்பாட்டை கட்டி எடுத்துக்கிட்டு காலையில 8 மணியில இருந்து ராத்திரி 8 மணி வரைக்கும் அந்த லைப்ரரில இருந்துதான் இரண்டரை வருஷம் படிச்சேன். அந்த லைப்ரரில யுபிஎஸ்சிக்கு படிக்கிறவங்க ரொம்ப கம்மிதான். இருந்தாலும் லைப்ரரியன் ராமசாமி சார், எங்களுக்காகத் தேர்வுத்தாள் ரெடி பண்ணி குடுத்து டெஸ்ட் வைக்குறது, புக்ஸ் வாங்கிக் கொடுக்குறது, வைஃபை வசதி செய்து கொடுக்குறதுன்னு எல்லா உதவிகளும் செஞ்சாரு.

Library

எங்க ஊரைச் சேர்ந்த ராஜா சார், IFS பாஸ் பண்ணி வேலை பார்க்கிறாங்க. அவங்க லீவுல ஊருக்கு வரும்போது எங்களுக்கும் கிளாஸ் எடுப்பாங்க. 2022-ம் வருஷம் டிசம்பர்ல சென்னையில ‘ஆல் இண்டியா சிவில் சர்வீஸ் இன்ஸ்டிட்யூட்’ல சேர்ந்தேன். அதுல சேர்றதுக்கு ஒரு எக்ஸாம் எழுத வேண்டியிருந்துச்சு. அதுல பாஸ் பண்ணி, இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்தேன். அங்க சாப்பாடு, தங்குற இடம்னு எல்லாமே ஃப்ரீதான். கட்டணமும் கிடையாது. ஆறு மாசம் அங்கயே தங்கியிருந்து படிச்சு முதல்நிலைத் தேர்வை (Prelims) க்ளியர் பண்ணிட்டேன்.

அதனால, தமிழக முதலமைச்சரின் ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் எனக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகை கிடைச்சது. நான் மெயின் க்ளியர் பண்றதுக்கு அது ரொம்ப உபயோகமா இருந்துச்சு. இந்த சமயத்துல, சென்னையில இருந்து மறுபடியும் ஊருக்கே வந்துட்டேன்.

நான் முதல்வன் திட்டம்

வீட்டுக்கு வந்து ‘நான் முதல்வன்’ திட்ட ஸ்காலர்ஷிப் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணினேன். அதனால, மாசம் ரூ.7,500 உதவித்தொகை கிடைச்சது. அதனால, மறுபடியும் சென்னைக்கு கிளம்பிப்போய் ரூம் எடுத்துத் தங்கிப் படிச்சேன். யுபிஎஸ்சிக்கு தயாராகிட்டு இருக்கும்போது இ.பி.எப்.ஓ (EPFO) எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணிட்டேன். கோவையில கிளர்க் போஸ்டிங் கிடைச்சுது. ரெண்டு மாசமா வேலைக்குப் போயிட்டு இருக்கேன்.

என் அம்மா, பீடி சுத்துறாங்க. பூ கட்டியும் வியாபாரம் பண்ணுவாங்க. என் அண்ணன்தான் நான் படிக்கிறதுக்க முழு ஆதரவா இருந்தாங்க. சின்ன வயசுல யுபிஎஸ்சினா என்னன்னு தெரியாது. ஆனா, கலெக்டர் ஆகணும்னு சொல்லிட்டு இருப்பேன். அது இன்னைக்கு நிஜமாயிடுச்சுன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு.

இன்பாவின் அம்மா ஸ்டெல்லா

நாலு வருஷமா தேர்வுக்காகத் தயாரான காலத்துல நிறைய விமர்சனங்களை எங்க அம்மா கேட்க வேண்டி வந்துச்சு. ‘எதுக்கு அவ்வளோ தூரம் போய் படிக்க வைக்கிற?’, ‘உன் நிலைமைக்கு எதுக்கு படிக்க வைக்கிற?’ ‘கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதுதானே?’, ‘உன் பொண்ணு போறா, வர்றா… படிக்கவா செய்யுறா’, ‘லைப்ரரிக்கு காலையில போயிட்டு நைட்டு வர்றா… அங்க போய் என்னதான் செய்வாளோ’னு அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க, சொந்தக்காரங்க கேட்காத கேள்வியே இல்ல.

சில நேரத்துல அம்மாவும், பேசாம கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்வாங்க. அந்த நேரத்துல நான் கொஞ்சம் ஸ்ட்ராங்கா நின்னு, படிக்கிறேன்னு சொல்லிடுவேன். நான் பாஸ் ஆனதும் எங்க அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டு, ’எல்லார் பேசுனதையும் நீ ஜெயிச்சு ஒண்ணுமில்லாம பண்ணிட்ட’னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க” – வெற்றி பெற்ற பூரிப்புடன் பேசி முடித்தார் இன்பா.

இன்பா

இன்பாவின் அம்மா ஸ்டெல்லா, “இன்பா என் பொண்ணுனு சொல்றதைவிட இன்பாவோட அம்மான்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. ‘என்னாலதான் முடியல, என் தங்கச்சி படிக்கட்டும்’னு அவங்க அண்ணன்தான் இவளுக்கு முழு சப்போர்ட். செங்கோட்டை லைப்பரிலயும் ரொம்ப சப்போர்ட் பண்ணினாங்க. இந்த நிமிஷம் என்னை மாதிரி யாருமே உலகத்துல சந்தோஷமா இருக்கமாட்டாங்க. எல்லாரும் என் பொண்ணைத் தேடி வந்து பாராட்டுறதைப் பார்க்கும்போது அவ்ளோ சந்தோஷமா இருக்கு” – ஆனந்தக் கண்ணீரில் குரல் தழுதழுக்கிறது ஸ்டெல்லாவுக்கு.

எளிய மக்களின் வெற்றிகள் மகத்தானவை!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.