ஹைதராபாத்: மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும். அதற்காக நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெறப்படும் என தெலங்கானா டிஜிபி ரவி குப்தா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கு விசரணையை முடித்துவைத்ததாக தெலங்கானா போலீஸ் அறிவித்தனர். மேலும் ரோஹித் வெமுலா பட்டியலினத்தைச் சேர்ந்தவே இல்லை என்றும் அந்த விசாரணை அறிக்கையில் போலீஸார் தெரிவித்திருந்தனர். ஹைதராபாத் போலீஸாரின் இந்த அறிவிப்பு பரவலாக சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு சில மணி நேரங்களிலேயே அம்மாநில டிஜிபி ரவி குப்தா, அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்ற அனுமதியைக் கோரவுள்ளதாகக் கூறியுள்ளார்.
யார் இந்த ரோஹித் வெமுலா? ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவரான ரோஹித் வெமுலா கடந்த 2016, ஜனவரி 17 அன்று தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை நாட்டின் உயர்க்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிய பாகுபாடு பற்றிய விவாதங்களுக்கு வழிவகுத்தது.
நாடு முழுவதும் ரோஹித் வெமுலாவுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில் இந்த விசாரணையை முடிவு செய்ததாக தெலங்கானா போலீஸ் நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு சில மணி நேரங்களிலேயே அம்மாநில டிஜிபி ரவி குப்தா, அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்ற அனுமதியைக் கோரவுள்ளதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில ஊடகத்துக்கு தெலங்கானா டிஜிபி ரவி குப்தா அளித்தப் பேட்டியில், “அந்த அறிக்கையில் சில சந்தேகங்கள் உள்ளன. ரோஹித் வெமுலாவின் தாயும், அவரைச் சார்ந்தோரும் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடவுள்ளோம். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக மாதபூர் துணை ஆணையர் இருந்தார். 2023 நவம்பரில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தார். விசாரணை அதிகாரி விசாரணையில் ஏதும் விட்டுள்ளாரா என்பதும் ஆராயப்படும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக ரோஹித் வெமுலாவின் சகோதரர் ராஜா வெமுலா ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், “நீதிக்கான எங்களின் போராட்டம் தொடரும். நாங்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களாக இல்லையா என்பதை எங்களுக்கு அந்த அங்கீகாரத்தை அளித்த மாவட்ட ஆட்சியரைத் தான் கேட்க வேண்டும்” என்றார். இந்நிலையில் தெலங்கான டிஜிபி மீண்டும் வழக்கு விசாரிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.