சென்னை அணியின் இளம் வீரரான மதிஷா பதிரனா, “அவர் என் அப்பா மாதிரி…” என தோனி குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிஎஸ்கே அணியின் செல்லப் பிள்ளையாகவே மாறியிருப்பவர் மதிஷா பதிரனா. தோனி உட்படப் பல முன்னணி வீரர்களும் ரசிகர்களும் பதிரனாவைப் பாராட்டி வருகின்றனர். பதிரனாவுக்கு மலிங்காவின் பௌலிங் ஸ்டைல் இருப்பதால் எல்லோரும் அவரை ‘குட்டி மலிங்கா’ என்று அழைக்கின்றனர். தனது அபார பந்துவீச்சு திறனை ஐபிஎல்-லில் அவர் வெளிப்படுத்தி வருகிறார்.
முன்னதாக அவரது வித்தியாசமான பந்துவீச்சு ஆக்ஷனால் ஈர்க்கப்பட்ட கேப்டன் தோனி அவரை சென்னை அணியில் இணைத்தார். அதுமட்டுமல்லாமல், பதிரானாவுக்கு கேப்டன் தோனி தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவது, முக்கிய தருணங்களில் அவர் விக்கெட் வீழ்த்திய போது தோளில் தட்டிக் கொடுத்து ஊக்கம் அளிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் தோனி குறித்து தற்போது பேசியிருக்கும் பதிரனா, “எனது கிரிக்கெட் வாழ்க்கையில், தோனிதான் எனது அப்பா. என்னை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார். நான் என்ன செய்ய வேண்டும் என்று நிறைய அறிவுரைகளை வழங்குகிறார். நான் களத்தில் இருக்கும்போதும் சரி, களத்திற்கு வெளியே இருக்கும்போதும் சரி அவர் கூறும் சின்ன சின்ன விஷயங்கள் கூட எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அவை எனக்கு மிகுந்த நம்பிக்கையையும் தரும்” என்று தோனி குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
இன்னும் சில நாள்களில் பிளே ஆப் சுற்று தொடங்க இருக்கிறது. இந்தத் தொடரில் சிஎஸ்கே அணி பங்கேற்ற 10 போட்டிகளில் ஐந்து வெற்றிகளையும், ஐந்து தோல்விகளையும் பெற்றுள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றால் மட்டுமே சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.