2024 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 2 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. ஜூன் 29 ஆம் தேதி வரை இத்தொடர் நடைபெற இருக்கிறது. சமீபத்தில் உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷதீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெற்றிருக்கின்றனர்.
இந்த அணியில் ரிங்கு சிங் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘ரிசர்வ்’ வீரராக மட்டுமே அணியில் இடம்பெற்றிருக்கிறார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி ரிங்கு சிங் குறித்துப் பேசும்போது, “வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் சுழலுக்குச் சாதகமாகவும் மெதுவாகவும் இருக்கலாம். இதன் காரணமாக அவர்கள் ஒரு கூடுதல் சுழல் பந்துவீச்சாளருடன் செல்வதற்கு விரும்பி இருக்கலாம்.
அதனால்தான் ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ரிங்கு சிங் மீண்டும் இங்கு முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அவர் கவலைப்படக் கூடாது. தற்பொழுது டி20 உலகக்கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்திய அணி அற்புதமான அணி. அதில் ஒவ்வொருவரும் மேட்ச் வின்னர்கள்.
இந்த 15 பேர் கொண்ட அணி போதுமானது. ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் புத்திசாலிகள். அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிறந்த அணியைத் தேர்வு செய்வார்கள்” எனக் கூறியிருக்கிறார்.