ராகவா லாரன்ஸுக்கு அவரின் தாயார் கொடுத்த அறிவுரை, இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் திரைப்படம் என்பதிலிருந்து தொடங்கி இந்த வாரத்தின் சில டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்.
நடிகர் ராகவா லாரன்ஸுக்கு அவரின் அம்மா கொடுத்த அட்வைஸ்!
நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகள் உட்படப் பலருக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில்கூட மல்லர் கம்பம் விளையாட்டில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிப்பதற்கும் அவர்களுக்கு மேலும் பல உதவிகள் கிடைத்திடவும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதியன்று ‘சேவையே கடவுள்’ அறக்கட்டளையிலிருந்து ‘மாற்றம்’ என்ற பெயரில் பல உதவிகளை செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.
இந்த அமைப்பில் தானும் இணைந்துக் கொள்வதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதன் மூலமாக முதற்கட்டமாக விவசாயிகளுக்கு 10 டிராக்டர்களை வழங்கி உதவி செய்யப்போவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார். இது குறித்து அவர், “நமது நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கு டிராக்டர்களை வழங்கி உதவி செய்யப்போகிறேன். எல்லோரும் இந்தப் பயணத்தில் இணைந்து எனக்கு உதவி புரியுங்கள். வார்த்தைகளைவிட செயல் பெரியது” எனப் பதிவிட்டிருக்கிறார். இதற்கான துவக்க விழாவில் நடிகர் லாரன்ஸின் தாயார், “இது சேவையாக மட்டுமே இருக்கணும். அரசியலாக்கிடாதப்பா!” என அறிவுரை கூறியிருக்கிறார்.
பழைய படங்களை ரீ-வாட்ச் செய்யும் கவின்
திரைப்படங்களில் தங்களின் முழு திறமையை வெளிப்படுத்த சில நடிகர்களையும் திரைப்படங்களையும் ரெஃபரென்ஸாக எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் நடிகர் கவின் ஒவ்வொரு திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்கும் சில திரைப்படங்களை ரெஃபரென்ஸாக எடுத்து ரீ-வாட்ச் செய்வாராம். அந்த வகையில் ‘ஸ்டார்’ திரைப்படத்திற்காக நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான ‘சஞ்சு’ திரைப்படத்தைப் பார்த்திருக்கிறார்.
இதற்கு முன்பு ‘டாடா’ திரைப்படத்திற்காகத் தயாராகுவதற்கு அஜித் நடித்த ‘முகவரி’ திரைப்படத்தையும், விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படத்தையும் பார்த்திருக்கிறார். தற்போது சமூக வலைதள ஃபீடுகளில் கவினின் ‘ஸ்டார்’ திரைப்படத்தின் வசனங்கள்தான் உலா வருகின்றன. இதுமட்டுமின்றி, ‘ஸ்டார்’ படத்தின் காட்சிகளை பார்த்துவிட்டு நடிகர் சிம்புவும் கவினைப் பாராட்டியிருக்கிறாராம்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ‘ஜி ஸ்குவாட்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார். தற்போது இயக்குநர் நெல்சனும் ‘ஃபிளமென்ட் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.
நெல்சன் தயாரிக்கும் முதல் திரைப்படத்திற்கு ‘ப்ளடி பெக்கர்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இதில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இதுமட்டுமின்றி, தற்போது கவின் நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்திலும் நடித்து வருகிறார். மேலும், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிப்பதற்கு கவினிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம். நடிகர் கவினும் தன்னுடைய கமிட்மென்ட்களை அவர்களிடம் எடுத்து கூறியிருக்கிறார்.
மீண்டும் பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ
25 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் பிரபுதேவாவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைக்கிறார்கள். அறிமுக இயக்குநர் மனோஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் (மே 2) தொடங்கியிருக்கிறது. கடைசியாக பிரபு தேவா நடிப்பில் உருவான ‘மின்சாரக் கனவு’ திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணையும் இத்திரைப்படத்தில் நடிகர் பிரபு தேவாவுடன் மலையாள நடிகர் அர்ஜுன் அசோகனும், அஜு வர்க்கீஸும் நடிக்கவிருக்கிறார்கள்.
பெங்காலியிலும் வெளியாகும் ‘புஷ்பா – 2’
‘புஷ்பா -2’ திரைப்படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இயக்குநர் தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘புஷ்பா புஷ்பா’ பாடல் கடந்த மே-1ம் தேதி வெளியானது. பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் ‘புஷ்பா -2’ கூடுதலாக பெங்காலி மொழியிலும் வெளியாகவிருக்கிறதாம்.
பவர் ஸ்டார் பவன் கல்யாணின் அடுத்த படைப்பு
நடிகர் பவன் கல்யாண், பாபி தியோல் ஆகியோர் நடிப்பில் ‘ஹரி ஹர வீர மல்லு’ என்ற பேன் இந்தியா திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்திற்கு ஏ.எம்.ரத்னம்தான் தயாரிப்பாளர். இதன் படப்பிடிப்பு கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொரோனா போன்ற பல சூழல்களால் ஷூட்டிங் தடைபட்டு இப்போது வரை நீண்டிருக்கிறது. தற்போது பெரும்பான்மையான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால் செப்டம்பர் மாதத்திலோ அல்லது தீபாவளி பண்டிகை சமயத்திலோ வெளியிடத் திட்டமிட்டு வருவதாகவும் சமீபத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறியிருந்தார்.
இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்பதையும் முன்பே அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் கடந்த மே 2-ம் தேதி வெளியாகியிருந்தது. இப்படத்தை டோலிவுட் இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்குகிறார் என்று தொடக்கத்தில் அறிவித்திருந்தனர். அப்படியிருக்கையில் இப்படத்தின் டீசரின் இறுதியில் இயக்குநர்கள் என இவரின் பெயரையும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகனான ஜோதி கிருஷ்ணாவின் பெயரையும் சேர்த்துக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி டைரக்ஷன் பணிகளையும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளையும் மேற்பார்வை செய்யவிருக்கிறாராம். மீதமுள்ள படத்தின் காட்சிகளையெல்லாம் ஜோதி கிருஷ்ணா இயக்கவிருக்கிறாராம்.