திருப்பூர்: “எஞ்சிய தொண்டர்களை ஏமாற்றாமல், வாரிசுக்காக கட்சி நடத்தாமல் தாய்க் கழகமான திமுகவில் மதிமுகவை இணைப்பதுதான் 31-ம் ஆண்டில் தொண்டர்களுக்கு வைகோ செய்யும் நன்மையாகும்” என்று திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “வரும் மே 6-ம் தேதி மதிமுக துவங்கப்பட்டு 31 ஆண்டுகள் ஆகிறது. வாரிசு அரசியலை எதிர்த்து துவங்கபட்ட மதிமுக, இன்றைக்கு அதே வாரிசு அரசியலுடன் வந்து நிற்கிறது. மதிமுக துவங்கப்பட்டபோது, குமரியில் இருந்து வைகோ துவங்கிய நடைபயணத்தில் அன்றைய முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் ஊழல் ஆட்சி குறித்தும், திமுகவின் வாரிசு அரசியல் குறித்தும் பேசிய பேச்சுகள் நடைபயணத்தின் ஒவ்வொரு ஊரிலும் மக்கள் கூடிய கூட்டத்தை பார்த்த மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு, பத்திரிகைகளும் திமுக செங்குத்தாக இரண்டாக பிளவுபட்டதாக கருத்து தெரிவித்தன.
1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் ஜனதாகட்சி கூட்டணி அமைத்து தோல்வியைத் தழுவியது. 1998-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஊழல் கட்சி என்று விமர்சித்த அதிமுக, பாஜகவுடன் கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட்டனர். 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக பாஜகவுடன் கூட்டணி, 2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் பேசி 23 தொகுதிகள் என்று முடிவான நிலையில், சங்கரன்கோவில் தொகுதி இல்லை என்று சொல்லி கூட்டணியை விட்டு வெளியேறி தனித்து போட்டியிட்டு எல்லா இடத்திலும் தோல்வியைத் தழுவினார் வைகோ.
2002-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக 8 பேர் பொடா சட்டத்தில் 19 மாதம் சிறைத் தண்டனை பெற்றனர். 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி, 2011-ல் ஜெயலலிதா குறைவாக தொகுதி கொடுக்க முன் வந்ததால், சட்டப்பேரவைத் தேர்தல் புறக்கணிப்பு, 2014-ம் ஆண்டு பாஜக, பாமக, விசிகவுடன் கட்சிகளுடன் கூட்டணி, 2016-ல் மக்கள் நலக்கூட்டணி அமைத்து போட்டி, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி, 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியிட்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு, வைகோவின் மகன் துரைவைகோ கட்சியில் சேர்ந்து பொறுப்பேற்று 2 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டுள்ளனர். திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றால், அது திமுக வெற்றியே தவிர, மதிமுக வெற்றியாக கருத முடியாது. 1993-ம் ஆண்டு தங்களை நம்பி வந்த முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என பலரும் திமுகவில் இணைந்துவிட்டனர். சிலர் அதிமுகவிலும் இணைந்துள்ளனர். பாஜகவில் கூட சேர்ந்துள்ளனர்.
எனவே, இனியும் எஞ்சிய தொண்டர்களை ஏமாற்றமல், உங்கள் வாரிசுக்காக கட்சி நடத்தாமல் தாய்க் கழகமான திமுகவில் மதிமுகவை இணைப்பதுதான் 31-ம் ஆண்டில் தொண்டர்களுக்கு செய்யும் நன்மையாகும். நான் எந்த கட்சியிலும் இனி சேரப்போவதில்லை.
பெரியார், அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றுகிறேன். பாஜகவின் ஒரே நாடு, ஒரே மொழி என்பதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில சுயாட்சிகளால் தான், இந்திய அரசின் ஆன்மா உள்ளது. ஒரு கட்சிக்கு தீவிர செல்வாக்கு கிடைத்தால், நாட்டில் சர்வாதிகாரத்துக்கே வழிவகுக்கும்” என்று அவர் தெரிவித்தார்.