மாஸான தொடக்கம், மிடில் ஓவரில் சொதப்பல் – ஆர்சிபிக்கு வெற்றியை உறுதிசெய்த DK!

RCB vs GT Match Highlights: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரின் 52வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று எதிர்கொண்டது. போட்டியில் டாஸை வென்ற கேப்டன் பாப் டூ பிளெசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

தொடர்ந்து குஜராத் அணி பேட்டிங் வந்த நிலையில், சாஹா 1, கில் 2, சாய் சுதர்சன் 6 என பவர்பிளே ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகள் சரிந்தது. இருப்பினும் ஷாருக் கானும், டேவிட் மில்லரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த ஜோடி 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் டேவிட் மில்லர் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ஷாருக்கான் 37 ரன்களில் ரன்அவுட் ஆகி வெளியேறிநார். 

குஜராத் ஆல்-அவுட்

இதன்பின் ராகுல் திவாட்டியா, ரஷித் கானுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார். ரஷித் கான் 18 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து விஜய் சங்கர் இம்பாக்ட் பிளேயராக உள்ளே வந்தார். இவரும், திவாட்டியாவும் குஜராத்தை நல்ல ஸ்கோருக்கு அழைத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், திவாட்டியா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரின் மூன்று பந்துகளில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் சரிய குஜராத் அணி 20 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது.

ஆர்சிபி அதிரடி தொடக்கம்

சிராஜ், யாஷ் தயாள், விஜய்குமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும்,  கிரீன் மற்றும் கரன் சர்மா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். தொடர்ந்து 148 ரன்கள் என்ற இலக்கை ஆர்சிபி அதிரடியாக துரத்தியது. விராட் கோலி – பாப் டூ பிளெசிஸ் ஜோடி முதல் ஓவரில் இருந்த பவுண்டரிகளை பறக்கவிட தொடங்கின. இதன்மூலம், 18 பந்துகளில் பாப் டூ பிளெசிஸ் அரைசதம் அடித்தார். இதன்மூலம், ஆர்சிபி அணிக்கு அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது வீரரானார் டூ பிளெசிஸ். கெயில் 17 ரன்களில் ஆர்சிபி அணிக்காக அரைசதம் அடித்துள்ளார். 

அடுத்தடுத்து விக்கெட்டுகள்

5.5 ஓவரில் 92 ரன்களை இந்த ஜோடி குவித்திருந்தபோது, டூ பிளெசிஸ் 23 ரன்களில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், இதன்பின் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய தொடங்க ஆர்சிபி பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியது. நூர் அகமது ஓவரில் வில் ஜாக்ஸ 1 ரன்னில் அவுட்டானார். லிட்டில் வீசிய 8வது ஓவரிலேயே பட்டிதர் 2, மேக்ஸ்வெல் 4 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். 

தொடர்ந்து, லிட்டில் வீசிய 10வது ஓவரில் கிரீன் 1 ரன்னிலும், நூர் அகமது வீசிய 11வது ஓவரில் கோலி 23 பந்துகளில் 64 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதில் விராட் கோலி 4 சிக்ஸர்களையும், 2 பவுண்டரிகளையும் அடித்திருந்தார். 92 ரன்களுக்கு முதல் விக்கெட்டு விழுந்த நிலையில், 117 ரன்களில் 6 விக்கெட்டுகள் மொத்தம் சரிந்தது. 

ஆர்சிபிக்கு 3வது வெற்றி

இருப்பினும், தினேஷ் கார்த்திக் – ஸ்வப்னில் சிங் இருவரும் சேர்ந்து ஆர்சிபி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். குறிப்பாக ரஷித் கான் வீசிய 12வது ஓவரில் 16 ரன்களையும், நூர் அகமது வீசிய 13வது ஓவரில் 10 ரன்களையும் இந்த ஜோடி குவித்தது. தொடர்ந்து, ரஷித் வீசிய 14வது ஓவரின் நான்காவது பந்தில் ஸ்வப்னில் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். 

..And breathe @RCBTweets fans

Swapnil Singh hits the winning runs

Recap the match on @StarSportsIndia and @JioCinema#TATAIPL | #RCBvGT pic.twitter.com/PHU2CIMP3n

— IndianPremierLeague (@IPL) May 4, 2024

சிராஜ் ஆட்ட நாயகன்… ஏன்?

இதன்மூலம், ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 12 பந்துகளில் 21 ரன்களையும் (3 பவுண்டரிகள்), ஸ்வப்னில் சிங் 9 பந்துகளில் 15 ரன்களையும் (2 பவுண்டரிகள், 1 சிக்ஸரையும்) அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் ஜோஷ் லிட்டில் 4 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை சிராஜ் கைப்பற்றினார். யாஷ் தயாள் 2 விக்கெட்டுகளை எடுத்து அவரை விட குறைவான ரன்களை கொடுத்திருந்தாலும், சாஹா, கில் என முக்கிய விக்கெட்டை தூக்கியதால் சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

புள்ளிப்பட்டியல் நிலவரம்

புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் இருந்து ஆர்சிபி தற்போது மொத்தம் 8 புள்ளிகளுடன் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குஜராத் அணி 8வது இடத்தில் இருந்து 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மும்பை அணி கடைசி இடத்தில் உள்ளது. குஜராத், ஆர்சிபி அணிகளுக்கு தலா 3 போட்டிகளே உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.