புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய கிராமப்புற சுகாதார இயக்ககத்தின் (என்ஆர்எச்எம்) கீழ் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களாக 63 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் சரியாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், கடந்த 5 ஆண்டுகளாக ஊதிய உயர்வு மற்றும் போனஸ் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஓட்டுநர்களின் குடும்பத்தினர் வறுமையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் நெட்டப்பாக்கத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வரும் அரவிந்தன் என்பவர் நோடல் அதிகாரி துரைசாமி என்பவருக்கு வாட்ஸ்அப்பில் ஆடியோ பதிவிட்டு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியது: “வேலை பார்க்குமாறு சொன்னீர்கள். பார்த்துவிட்டேன். ஆனால், ஊதியம் மட்டும் வரவில்லை. நான் புதுச்சேரியில் இருந்து நெட்டப்பாக்கம் செல்ல ஒரு நாளைக்கு ரூ.100 செலவாகிறது. இதற்கு எதாவது முயற்சி எடுக்கிறீர்களா? நாளை முதல் நான் வேலைக்கு செல்ல மாட்டேன். நான் வேலைக்கு செல்ல அட்வான்ஸ் கொடுங்கள். ஊதியம் இல்லாமல் என்னால் வேலை செய்ய முடியாது. மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் ஊதியம் கொடுத்தால் மட்டுமே வேலை செய்ய முடியும்.
ஒன்பதரை ஆண்டுகளாக நெட்டப்பாக்தக்தில் வேலை செய்து வருகிறேன். நீங்கள் ஊதியம் போடவில்லை என்றால் நான் என்ன செய்வது?. எனது மனைவி, பிள்ளைகள் அழுகிறார்கள். எதற்கு வேலைக்கு செல்கிறீர்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள். நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும் எனக்கு பிரச்சினை கிடையாது. தொழிலாளர் நீதிமன்றத்துக்கு சென்று நீங்கள் ஊதியம் போடவில்லை என்று சொல்வேன். எனக்கு சரியாக ஊதியம் போட்டால் மட்டுமே வேலை செய்ய முடியும். முதல்வர்தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
தயவு செய்து எங்களுக்கு ஊதியம் போடுங்கள் துரைசாமி சார் ரூ.300 கூகுள் பே பண்ணுங்கள். ஊதியம் இல்லாமல் வேலைக்கு செல்வதற்கு மனைவியிடம் திட்டு வாங்குகிறேன். வேலையை விட்டு நின்றுவிடுங்கள் என என்னுடைய மனைவி கூறுகிறார். நான் நாளைக்கு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் யாரிடமாவது பெட்ரோலுக்கு காசு கொடுத்து விடுங்கள். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சரிதான்” என்று அதில் கூறியுள்ளார். இந்த ஆடியோ பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து ஓட்டுநர் அரவிந்தனிடம் கேட்டபோது, “புதுச்சேரி முத்திரைபாளையம் காந்திதிருநல்லூர் என்ஆர் ராஜிவ் நகரில் குடியிருந்து வருகிறேன். கடந்த 2014-ம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியில் சேர்ந்தேன். தற்போது எனக்கு ரூ.10,300. அதிலும் இபிஎப் என்று மாதந்தோறும் 1000 பிடித்தம் செய்துகொண்டு, ரூ.9,300 கொடுகின்றனர். இந்த ஊதியமும் கடந்த 2 மாதங்களாக போடவில்லை. இதனால் எனது குடும்பம் வறுமையில் வாடுகிறது. இந்த பணியை சேவை மனப்பான்மையுடன் செய்து வருகின்றேன். ஊதியம் வழங்கினால் தான் குடும்பத்தை நடத்த முடியும். 5 ஆண்டுகளாக ஊதிய உயர்வு, போனஸ், ராயல்ட்டி என எதுவும் வழங்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.