சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அதன் இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு 94.03% விகிதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
* தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 5603. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 5161. (92.11%)
* தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 125. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 115 (92%)
* இத்தேர்வில் 397 அரசுப் பள்ளிகள் முழு தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகப் பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 83 மையங்களில் ஏப்.1-ல் தொடங்கி 13-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் நிறைவு பெற்றன. இந்நிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முடிவுகளை எங்கு பார்க்கலாம்? பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி வழியாக அனுப்பி வைக்கப்பட்டது.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.