புதுச்சேரி: பிளஸ் 2 தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில் 92.41 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 0.26 சதவீதம் குறைவு. மேலும், 55 அரசு பள்ளிகளில் ஒரெயொரு பள்ளி மட்டுமே நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்புகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது: புதுவை, காரைக்காலில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்2 பொதுத்தேர்வை 6 ஆயிரத்து 566 மாணவர்களும், 7 ஆயிரத்து 446 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 012 பேர் தேர்வு எழுதினர்.
இதில் புதுவை அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 867 மாணவர்கள், 7 ஆயிரத்து 081 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.புதுவையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களில் 86.39 சதவீதம், காரைக்காலில் 81.65 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மொத்த சதவீதம் 85.35 ஆகும். இது கடந்தாண்டை விட 0.58 சதவீதம் அதிகம்.
புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 155 உள்ளன. இதில் 55 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுவையில் 51 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. காரைக்காலில் 4 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள அரசுப் பள்ளிகள் 55 . இதில் மடுகரை அரசு மேனிலைப்பள்ளி மட்டுமே நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை 526 பேர் பெற்றுள்ளனர்.
கணினி அறிவியலில் 165 பேரும், பிரெஞ்சு மொழிப் பாடத்தில் 135 பேரும், வணிகவியலில் 81 பேரும், கணிப்பொறி பயன்பாட்டில் 69 பேரும், பொருளியலில் 22 பேரும், கணிதத்தில் 20 பேரும், கணக்கு பதிவியலில் 15 பேரும், இயற்பியலில் 9 பேரும் உயிரியலில் 4 பேரும், வேதியியலில் 3 பேரும் விலங்கியல், வணிக கணிதம், மனையியலில் தலா ஒருவரும் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
நடப்பு கல்வியாண்டுடன் தமிழக பாடத்திட்டம் அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பில் நிறைவடைகிறது. வரும் கல்வியாண்டிலிருந்து 12ம் வகுப்பில் சிபிஎஸ்இ அரசு பள்ளிகளில் அறிமுகமாகிறது. அவ்வழித்தேர்வுகள் நடக்கவுள்ளது குறிப்பிட்டத்தக்கது.