அமேதியில் காங்கிரஸ் அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

அமேதி,

உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் கவுரிகஞ்ச் பகுதியில் காங்கிரஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிர்வாகிகளுக்கு சொந்தமான 12க்கும் மேற்பட்ட கார்கள் வெளியே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் நேற்று இரவு 6க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் திடீரென வந்து காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கி உள்ளனர். சத்தம் கேட்டு கட்சி தொண்டர்கள் அங்கு வரும் முன்பு, மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இதில் கார்களில் அமர்ந்திருந்த சிலர் காயமுற்றனர். இது பா.ஜனதாவின் அராஜகம் என காங்., செய்தி தொடர்பாளர் சுப்ரியா கண்டித்துள்ளார். தோல்வி பயத்தையே இது காட்டுகிறது என்றும் அவர் எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அமேதி காங்கிரஸ் மாவட்ட செய்தித் தொடர்பாளர் அனில் சிங் கூறுகையில், நேற்று இரவு நடந்த சம்பவம் ஆளும் பா.ஜ.க. திட்டமிட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். காயம் அடைந்த சிலர் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உ .பி., மாநிலம் அமேதியில் காங்கிரஸ் நிர்வாகிகளின் கார்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.