சாதிய வன்கொடுமைக்கு உள்ளான நாங்குநேரி மாணவர் சின்னத்துரை 600-க்கு 469 மதிப்பெண்

திருநெல்வேலி: நெல்லையில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுவன் சின்னத்துரை பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். உடல் முழுவதும் தீவிரக் காயங்களால் பாதிக்கப்பட்டு காலாண்டுத் தேர்வையே மருத்துவமனையில் இருந்தபடியே எழுதியிருந்தார். பின்னர் மீண்டுவந்து பிளஸ் 2 தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

நடந்தது என்ன? – நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி சின்னத்துரை என்ற மாணவனும், அவரது தங்கையும் சக மாணவர்களால் வீட்டில் சாதிய வன்மத்தால் தாக்கப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்னத்துரை குடும்பத்தின் பாதுகாப்புக்கும், குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கும் தமிழக அரசு பொறுப்பேற்றது.

நான்கு மாதங்களாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் தனது காலாண்டு தேர்வை ஆசிரியர்கள் உதவியுடன் மருத்துவமனையில் இருந்தபடியே எழுதினார். இந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு நாங்குநேரியில் வசித்தால் பாதுகாப்பு இருக்காது என குடும்பத்தினர் முறையிட்டதினால் உடனடியாக வேறு இடத்துக்கு மாற ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

சின்னத்துரையின் தாயார் நாங்குநேரியில் உள்ள அம்பேத்கர் தொடக்கப் பள்ளியில் சத்துணவுப் பணியாளர் வேலை பார்த்த நிலையில் அவரை ரெட்டியார் பெட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணி மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களும் தாங்கள் படித்த பள்ளியிலேயே படித்தால் தனக்கு மீண்டும் அச்சம் ஏற்படும் என்று கூறியதினால் பாளையங்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறையின் பரிந்துரையின் பேரில் சேர்க்கப்பட்டார். அவரது தங்கையும் பாளையங்கோட்டையில் உள்ள மேரி சார்ஜர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர்களது பள்ளிப் படிப்பு மற்றும் மேல் படிப்புக்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் தனி கவனம் செலுத்தி தங்களது பள்ளி படிப்பை தொடர்ந்தனர். தற்பொழுது மாணவன் சின்னத்துரை பிளஸ் 2 பொதுத் தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.