சிறிது நேரம் கோபப்படுவதுகூட மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகளுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், அமெரிக்காவில் உள்ள ‘யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின்’, நியூயார்க்கில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து, உணர்ச்சி மாறுபாடுகள் மனித நலனில் எவ்வாறு பிணைந்துள்ளன என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் ஆரோக்கியமான 280 பேர் பங்கேற்றனர். இவர்களை நான்கு குழுவாகப் பிரித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஒவ்வொரு குழுவுக்கும் கோபம், சோகம், சந்தோஷம் போன்ற உணர்வுகளைத் தூண்டும் நிகழ்வுகள் அவர்களுக்கு நினைவூட்டப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர்களின் உணர்வுகளை நடுநிலையாக்க 1 முதல் 100 வரை சத்தமாக எண்ணும்படி செய்தனர்.
அதன்பின் அவர்களது ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வுக்கு முன்னும், பின்னும் ரத்த ஓட்டம் மற்றும் ரத்த அழுத்தத்தினை அளவீடு செய்தனர். அதில், கோபமான உணர்ச்சியை உணர்ந்தவர்களின் ரத்த நாளங்களின் விரிவடையும் திறன் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர்.
சோகம், சந்தோஷம் போன்ற உணர்வுகளை உணர்ந்தவர்களின் ரத்த நாளங்களின் விரிவாக்கத் திறனில் எந்த பாதிப்பும் இல்லாமல் மாற்றமின்றி இருப்பது கண்டறியப்பட்டது.
ஆய்வு தொடர்பான அறிக்கையில், “சிறிது நேரம் கோபம் கொள்வதுகூட ரத்த நாளத்தின் விரிவடையும் திறனை பாதித்து ரத்த ஓட்டத்தை கடினமாக்குகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோன்ற சூழல் மாரடைப்புக்கு வழிவகுக்கலாம். கோபமடையும்போது ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். திடீரென்று ரத்த அழுத்தம் அதிகரிப்பது பக்கவாதம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
இந்த பிரச்னைகள் அனைவருக்கும் ஏற்படாது. இதயம் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கோபம் என்பதும் ஒருவகை உணர்வே. அதனால் ஒருவர் கோபமேபடக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், நிச்சயம் கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது” என்று குறிப்பிட்டுள்ளனர்.