லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் 81 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 236 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி, 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது;-
“கடந்த 6 ஆட்டங்களாக டிரஸ்சிங் ரூமில் ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. எங்கள் அணி வீரர்கள் என்னிடம் வந்து, நாம் தொடர்ந்து டாஸில் தோல்வி அடைந்து வருகிறோம், என்ன நடக்கிறது? என்று கேட்கிறார்கள். டாஸ் கிடைப்பதில் தோல்வி ஏற்பட்டாலும், ஆட்டத்தில் வெற்றி பெறுகிறோம் என்பதே முக்கியமானது.
இந்த ஆட்டத்தின் பவர்பிளேயில் எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. இடது-வலது பேட்ஸ்மேன் ஜோடி எதிரணிக்கு நெருக்கடியை கொடுக்கக்கூடியது. ஆட்டத்தின் சூழல் எப்படிப்பட்டதாக இருந்தாலும், நேர்மறையாக சிந்தித்து வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். இந்த அணுகுமுறை சில சமயங்களில் வேலை செய்கிறது, சில சமயங்களில் வேலை செய்வதில்லை.”
இவ்வாறு ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.