வெப்ப அலை, கத்தரி வெயில் என கோடை வெயில் வழக்கத்துக்கு மாறாக தமிழக மக்களை வாட்டி வதைக்கிறது. கொளுத்தும் வெயிலால் தமிழகம் முழுவதுமுள்ள ஏரி, குளங்கள் ஒவ்வொன்றாக வறண்டுபோய்கொண்டிருக்கின்றன. ஒருபக்கம் தண்ணீர் தட்டுப்பாட்டால் விலங்குகள் தொடங்கி மனிதர்கள்வரை தவித்துக்கொண்டிருக்க, மற்றொருபக்கம் மக்களின் மின்சாரப் பயன்பாடும் வெகுவாக அதிகரித்து, மின்வெட்டு, மின்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.
கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு:
காலநிலை மாற்றம், அதிதீவிர வெயில், மழைநீர் சேகரிப்பில் அரசின் மெத்தனம் என பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை கோடை காலத்தில் வெகுவாக நீர்நிலைகள் வறட்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. குறிப்பாக, தலைநகர் சென்னைக்கு தண்ணீர் தரும் ஏரிகளில் வெறும் 50% மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. அதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டுபோய்விட்டது. தலைநகர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க நீலகிரி தொடங்கி வீராணம் வரை பல ஏரிகள் வேகமாக வறண்டு கொண்டிருக்கின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தமிழகத்தில் ஆங்காங்கே தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்திருப்பதால், பொதுமக்கள் போராட்டதில் ஈடுபட்டுவரும் சம்வங்களும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தவும் தடையற்ற தண்ணீர் விநியோகத்தை உறுதிசெய்வதற்காகவும் அமைச்சர்கள் அதிகாரிகளிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கோடை காலம் தொடங்கியிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். குடிநீர், மின்சாரமின்றி எந்த மக்களும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதற்காக அனைத்து மாவட்ட அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என அறிவுறுத்தினார். மேலும், வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிப்பதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கியும் உத்தரவிட்டார்.
`அறிவிக்கப்படாத மின்வெட்டு’:
தண்ணீர் தட்டுப்பாட்டைப் போலவே மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டின் மின்தேவை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து தகவல் தெரிவித்திருக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்(TANGEDCO), “மாநில, சென்னை மாநகர மின் தேவை மற்றும் பயன்பாடு தொடர்ந்து அதிஉச்சம் அடைகின்றன. வெப்ப அலையின் ஊடே 02.05.2024 அன்று மாநிலத்தின் மின் தேவை 20830 மெகாவாட் (15.00-15.30 மணி) என புதிய உச்சத்தை எட்டியது. இதற்கு முந்தைய அதிகபட்ச மின் தேவை 20701 மெகாவாட் (30.4.24) ஆகும். இருப்பினும் நம்பகமான மின்சார வழங்கலை உறுதி செய்து வருகிறது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்!” எனத் தெரிவித்தது.
இந்த நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுப்பினும் அது போதுமான அளவுக்கு பலனளிக்கவில்லை என்றும், இனிவரும் நாட்களில் இந்த பாதிப்பு இன்னும் அதிமாக இருக்கும் எனவும் பல்வேறு நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர். தவிர, பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களும் திமுக அரசை கடுமையாக விமர்சித்திருக்கின்றனர். குறிப்பாக, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், “தமிழகத்தில் கோடைவெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் அடிக்கடி நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் முறையான மும்முனை மின்சாரமின்றி கருகும் நெற்பயிர்கள், சீரான மின்விநியோகமின்றி தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம் என திமுக ஆட்சியில் நிலவும் மின்வெட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாள்தோறும் வெளியாகும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. கோடைகாலத்தில் பொதுமக்கள் தொடங்கி தொழிற்சாலைகள் வரையிலான மின்நுகர்வுகளின் பயன்பாடுகள் அதிகரிக்கும் என தெரிந்திருந்தும், அதற்கு தீர்வு காணும் வகையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆளும் திமுக அரசு எடுக்கவில்லை என்பதை அடிக்கடி அரங்கேறும் மின்வெட்டுகளே அம்பலப்படுத்துகின்றன” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
`தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி குறைவு’:
அதேபோல, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “தமிழகத்தின் பல மாவட்டங்களில் தினமும் ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அறிவிக்கப்படாத மின்வெட்டு ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் மின் அழுத்தக் குறைவால் வீடுகளில் உள்ள குளிரூட்டிகள், மின் விசிறி ஆகியவற்றை இயக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து 21 ஆயிரம் மெகாவாட் என்ற அளவைத் தொட்டுள்ளது. மத்திய மின் தொகுப்புகள், தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து மின்சாரம் வாங்கினாலும் தினமும் 300 முதல் 400 மெகாவாட் வரை மின்சாரம் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், அதை சமாளிக்கவே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் மின்சாரவாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது மக்களுக்கு மின்சாரம் வழங்குவதில் தமிழக அரசும், மின்சார வாரியமும் தோல்வியடைந்து விட்டதையே காட்டுகிறது.தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி அதிகபட்ச மின் தேவை 19693 மெகாவாட். இதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி வெறும் 4332 மெகாவாட் மட்டும் தான். தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே தமிழக அரசால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேநிலை நீடித்தால் மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு தன்னிறைவு பெற முடியாது. தமிழ்நாட்டில் மின்வெட்டு தொடர்கதையாகவே நீடிக்கும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.
`மும்முனை மின்சாரம் வழங்குவதில் தோல்வி’:
அதேபோல பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் வேளாண்மை மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு 24 நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவதில் தமிழ்நாடு மின்சார வாரியம் படுதோல்வி அடைந்து விட்டது. உழவர்களுக்கு 24 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டியது மின்சார வாரியத்தின் கடமை என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை செயல்படுத்த மின்வாரியம் மறுப்பது ஆணையத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சேவியர் என்பவர் தொடர்ந்து அவருக்காக நீலகண்டப் பிள்ளை என்ற மின்சார வாரியத்தின் ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் வாதிட்ட வழக்கில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி அளித்தத் தீர்ப்பில் இதை உறுதி செய்திருக்கிறது.
அதாவது, ‘‘உழவர்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்குவது சாத்தியமானது தான். உழவர்களின் ஒத்துழைப்புடன் இதை சாத்தியமாக்க முடியும் என்பதை தில்லியில் செயல்பட்டு வரும் மின்சார வினியோக அமைப்புகள் உறுதி செய்திருக்கின்றன. மின்சாரப் பற்றாக்குறையை போக்குவதற்கு மும்முனை மின்சாரத்திற்கு மாற்றாக இருமுறை மின்சாரம் வழங்குவது தான் தீர்வு என்று மின்வாரியம் நினைப்பது தவறு. இந்த அணுகுமுறையை விடுத்து 24 மணி நேரமும் உழவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழில் துறையினருக்கும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்’’ என்று அந்தத் தீர்ப்பில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறியிருக்கிறது. அதை மின்சார வாரியம் செயல்படுத்த வேண்டும்!” எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்.
`சீரான மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது!’:
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, “தமிழகத்தின் மின்சாரத் தேவை, மின் விநியோகத்தில் எந்தவித இடைவெளியும் இல்லை. மாநிலம் முழுவதும் தடையில்லாத, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கோடைக்காலத்தில், மின்சார விநியோக பாதையில் உள்ள மின் மாற்றிகள், புதைவட கம்பிகள், மின் கம்பிகளில் ஏற்படும் பழுதுகள் காரணமாக சில இடங்களில் மின்தடை ஏற்படும். அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு தடையில்லாத, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் அவற்றை உடனடியாக சரிசெய்வதற்காக 60 பறக்கும் படை குழுக்கள் (SQUAD) அமைக்கப்பட்டிருக்கின்றன. டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரையில், விவசாய மின் இணைப்புகளின் பயன்பாடு என்பது இரவு நேரங்களில் அதிகமாக இருப்பதால், ஒரு சில பகுதிகளில் உயரழுத்த மின் பாதைகளில் இடையூறுகள் ஏற்படுகின்றன. அவற்றை சரிசெய்ய, போர்க்கால அடிப்படையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தமாத இறுதிவரை அதிகளவு மின்தேவை ஏற்பட்டால் அதை சமாளிக்க மின்வாரியம் தயாராக உள்ளது!” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88