புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக தலைவர் நட்டா மற்றும் கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவர்கள் மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
எக்ஸ் தளத்தில் கர்நாடக பாஜக பதிவேற்றம் செய்த வீடியோ குறித்து கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
கர்நாடக பாஜக தனது எக்ஸ் தள கணக்கில் பதிவேற்றம் செய்த வீடியோவில் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா ஆகியோரின் அனிமேஷன் கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் எஸ்.சி, எஸ்.டி, மற்றும் ஒபிசி பிரிவினர் கூண்டில் உள்ள முட்டைகள் போல் காட்டப்பட்டுள்ளனர். முஸ்லிம் சமுதாயம் என பெயரிடப்பட்ட பெரிய முட்டை ஒன்றை ராகுல் வைப்பது போல் காட்டப்பட்டுள்ளது. எஸ்.சி,எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவின் நிதியை பறித்து முஸ்லிம் சமுதாயத்தினருக்கு கொடுப்பதுபோல் அந்த அனிமேஷன் சித்தரிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான நிதி ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டு முஸ்லிம் சமுதாயத்தினருக்கு வழங்கப்படும் என எங்கேயும் குறிப்பிடவில்லை. ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என எஸ்.சி, எஸ்.டிமற்றும் ஓபிசி பிரிவினரை தூண்டுவது போன்ற பாஜக வீடியோ வெளியிட்டிருப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.
எனவே, இந்த வீடியோ வெளியானதற்கு காரணமான கர்நாடக பாஜக ஐ.டி பிரிவுக்கு தலைமை வகிக்கும் அமித் மால்வியா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு காங்கிரஸ் தனது புகாரில் தெரிவித்துள்ளது.