‘பொன்னியின் செல்வன்’ தமிழ் சினிமாவின் நீண்ட கால கனவு. அதை திரைப்படமாக்கித் திரைக்குக் கொண்டுவருவது பல முன்னணி இயக்குநர்களின் கனவாக இருந்தது. அதைச் சாத்தியப்படுத்தினார் மணிரத்னம்.
எல்லா இயக்குநர்களுக்குள்ளும் அப்படியொரு கனவுப் படம் இருக்கும். அதுபோல சுந்தர் சி யின் கனவுப் படம் ‘சங்கமித்ரா’. இது குறித்து மனம் திறந்து பேசியிருக்கும் சுந்தர் சி, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை விட பிரமாண்டமானது தன்னுடைய ‘சங்கமித்ரா’ என்று பெருமிதத்துடன் சொல்கிறார். விஜய்க்குச் சொன்ன கதையில் அஜித் நடித்தது, ஹாரர் எடுப்பதற்காகக் காரணம், மலையாள சினிமாவின் தாக்கம், ஒரே டெம்ப்ளேட்டில் மாட்டிக் கொண்டது என பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
காமெடி டு ஹாரர்
சுந்தர சி சார் படங்கள் என்றாலே காமெடி, ஃபேமலி ட்ராமா ஜானர்கள்தான். ஹாரர் ஜானரில் படம் பண்ணலாம் என்கிற ஐடியா எப்ப வந்தது?
எனக்கு பேய் பயம் அதிகம். இப்பவும் தனியா தூங்க பயப்படுவேன். ஹாரர் படங்கள் பார்க்கவே மாட்டேன். குழந்தைகள், பெண்கள் எல்லாம் ஹாரர் படங்கள் பார்க்கமாட்டாங்கனு நெனச்சிட்டு இருந்தேன். ஒருநாள் எங்க வீட்டுக்கு கெஸ்ட் வர்றப்போ குழந்தைகள், பெண்கள் எல்லாம் ஹாரர் படங்களை விரும்பிப் பார்ப்பாங்க. அப்போதான் ஹாரர் படம் எடுத்த நல்லா ஓடும்னு தோனுச்சு. அப்படிதான் ஹாரர் படங்கள் பண்ணலாம் என்கிற ஐடியா வந்தது. ஆனால், இருட்டு, பழைய பாழடஞ்ச வீடு என டார்க்கா இல்லாம, கலர்ஃபுல்லா ஹாரர் படங்கள பண்ணனும்னு நினைச்சேன்.
‘மைக்கேல் மதன காமராஜன்’ பார்த்துதான் ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் பண்ணுனேன்.
நல்ல பிரமாண்டமா, கலர்ஃபுல்லா, நிறைய ஸ்டார்களோடு காமெடி படம் பண்ணும்னு ஆசை. ‘மைக்கேல் மதன காமராஜன்’ படம் அப்படித்தான் இருக்கும். அதே ஜானர்ல படம் பண்ணனு எடுத்ததுதான் ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம். அப்படித்தான் ஹாரர் படங்களும் பிரமாண்டமா, கலர்ஃபுல்லா, நிறைய ஸ்டார்களோடு இருக்கனும்னு நினைச்சு ‘அரண்மனை’ எடுத்தேன். அது நல்ல ஹிட்டானது. அதனால ‘அரண்மனை’ படத்த ஃபிரான்சைஸ் பண்ணிட்டு இருக்கேன். ஒருவேளை விஷால வச்சு எடுத்த ‘ஆக்ஷன்’ படம் ஹிட்டாகிருந்தா அத ஃபிரான்சைஸ எடுத்திருப்பேன். அது ஹிட்டாகல. ஒரு படம் நல்லா ஹிட்டானாதான் ஃபிரான்சைஸ் பண்ண முடியும். வெற்றிதான் அதை தீர்மானிக்குது.
அஜித் நடித்த ‘உன்னைத் தேடி படம் விஜய் பண்ண வேண்டியது
ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட காம்போக்களில் ஒன்னு சுந்தர் சி – விஜய். நீங்க சேர்ந்து படம் பண்றதுக்கு பேச்சுவார்த்தைகள் போச்சா… அது எதுனால நடக்கலை?
விஜய் சாருக்கு நிறைய கதை சொல்லிருக்கேன். ‘உன்னைத் தேடி’ கதையை முதல்ல விஜய் சார் கிட்டதான் சொன்னேன். அவருக்குக் கதைய அட்டை டு அட்டை முழுசா சொல்லணும். 4 மணி நேரம்கூட உட்கார்ந்து கதை கேட்பாரு விஜய். தமிழ் சினிமாவில் முழுசா கதைக் கேட்டு படம் பண்றவங்க அப்போ விஜயகாந்த் சார், இப்போ விஜய் சார்.
எனக்கு கதை சொல்ல வராது. கதையோட ஐடியா மட்டும்தான் சொல்லுவேன். அதனால ‘உன்னைத் தேடி’ படத்தோட ஐடியாவ மட்டும் விஜய் கிட்ட சொன்னேன். அவருக்குப் புரியல. ‘ஐடியா நல்லா இருக்கு, அப்பா கிட்ட கேட்டு சொல்றேன்னு’ சொல்லிட்டார். எஸ்.ஏ. சி சந்திர சேகர் சார், ‘முழுசா கதை கேட்டுதான் நடிக்கனும் அப்படிங்கிற பழக்கத்தை தெரிஞ்சோ, தெரியமாலோ விஜய்க்குப் பழக்கிவிட்டுட்டேன். நீங்க சொன்ன ஐடியா அவருக்குப் புரியல. ஆனால், உங்கக் கூட படம் பண்ண விஜய்க்கு ஆசை. இந்தப் படத்தைப் பண்ணுவோம்’னு எங்கிட்ட சொன்னார்.
அடுத்த பத்து நாளுக்குப் பிறகு, அஜித் என்னைத் தேடி வந்து ‘உங்கக் கூட படம் பண்ணனும்னு நினைக்கிறேன். நாம ஒரு படம் பண்ணலாமானு’ கேட்டார். நம்மல தேடி வந்து ஒரு ஹீரோ படம் பண்ணலாமானு கேட்கிறார். அவரோடு படம் பண்ணியே ஆகனும்னு, விஜய்க்குச் சொன்ன ‘உன்னைத் தேடி’ கதையை அஜித்த வச்சு பண்ணிட்டேன். விஜய் கூட வேற ஒரு படம் பண்ணலாம்னு பிளான் பண்ணேன். ஆனால், அது தள்ளிப் போயிருச்சு. விஜய்யும் பிஸியாகிட்டார். அதன் பிறகு அவர்கிட்ட கதை சொல்லிருக்கேன். ஆனால், அதெல்லாம் பண்ண முடியாம தள்ளிப் போய்க்கிட்டே இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் விஜய்க்கு ஒரு கதை சொன்னேன், முதல் பாதி கேட்டுட்டு பாராட்டினார். இரண்டாம் பாதி சரியில்ல கொஞ்சம் மாத்திக்கலாம்னு சொன்னார். இதே கதையை வேற ஒருத்தர வச்சு ஹிட் கொடுக்குறேனு மனசுல நெனச்சுட்டு வந்துட்டேன்.
அவர் சொன்ன மாதிரியே இரண்டாம் பாதி சரியில்லை. அந்தப் படமும் தோல்விப்படமாகிருச்சு. இப்படி விஜய்க்கு நிறையக் கதை சொல்லிருக்கேன். ஆனால், நாங்க படம் பண்ணுவது பல காரணங்களால் தள்ளிப்போகிட்டே இருந்துச்சு. நடிக்கிறத விட்டுட்டு 2026 தேர்தலில் களம் இறங்கப் போகிறார். கடைசியா ஒரே ஒரு படம் பண்ணப் போகிறார். கண்டிப்பா அந்தப் படத்தோட இயக்குநர் நான் இல்லை. அதனால, இனி அவர் கூட படம் பண்ணுவது கஷ்டம். இப்படி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விஜய் கூட பண்ணுவது பல காரணங்களால் தள்ளிப்போனது.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜய், எல்லாத்தையும் விட்டுட்டு முழுநேர அரசியல்வாதியாக மக்களுக்காக தேர்தலில் களமிறங்குவது பாராட்டுக்குரியது. அவருக்கு என் வாழ்த்துகள். இன்னோரு பக்கம் விஷாலும் 2026ல் அரசியலில் களமிறங்கப் போவதாகச் சொல்லிருக்கார். என்னைப் பொறுத்த வரை விஷால் இப்ப அரசியலுக்கு வரக் கூடாது. அவர் இன்னும் நிறைய படங்கள் பண்ணிட்டு அரசியலுக்கு வரணும்.
‘சங்கமித்ரா’ 25 வருஷமா எனக்குள்ள இருந்த கனவு; பொன்னியின் செல்வனைவிட பெரிய படமாக இருக்கும்!
ரொம்ப வருஷமா ப்ளான் பண்ணிட்டு இருந்த பொன்னியின் செல்வன் கூட இரண்டு பாகமா வந்துவிட்டது… சங்கமித்ரா வருமா? ஏன் சங்கமித்ரா உங்களுக்கு ஸ்பெஷல்?
‘சங்கமித்ரா’ படம் 25 வருஷமா எனக்குள்ள இருந்த கனவு. அந்தப் படத்தை பிரமாண்டமாக எடுக்க ஆசை. பெரிய பட்ஜெட் என்பதால் நல்ல தயாரிப்பாளர் கிடைக்கனும்னு காத்துக்கிட்டு இருந்தேன். ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி அதைத் தயாரிக்க முன் வந்தார். ஆனால், சில காரணத்தால் அவரால் தயாரிக்க முடியாமல் போனது. நானே தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தான். பெரிய பட்ஜெட், தயாரிப்பாளர் – இயக்குநர் என இரண்டு வேலைகளையும் நானே செய்ய முடியாது. இப்போ கூட ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க முன் வந்தது. ஆனால், ஒரு சில படங்களைப் பண்ணிட்டு பிறகு பண்ணலாம்னு சொன்னாங்க. அந்த சமயத்துல வேற நிறைய தயாரிப்பாளர்கள் கிடைச்சாங்க. ஆனால், அந்தத் தயாரிப்பு நிறுவனம் அவங்களே பண்ணுவதாகச் சொல்லி படத்தை வேறு தயாரிப்பாளர் கிட்ட போகவிடல. இப்படி அந்தப் படம் தயாரிப்பாளர் கிடைக்காமல் தள்ளிப் போயிக்கிட்டே இருக்கிறது.
‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்த்துவிட்டு ‘சங்கமித்ரா’வை எடுக்க வேண்டும் என்ற வெறி வந்தது. ‘பொன்னியின் செல்வன்’ பெரிய படம்தான். ஆனால், என்னுடைய ‘சங்கமித்ரா’ அதைவிடவும் பெரிய படம். திரைக்குக் கொண்டுவந்தால் மிகப்பிரமாண்டமாக இருக்கும். நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் நிச்சயம் அப்படத்தை எடுப்பேன்.
கவுண்டமனி சார் எந்த போஸ்டர்ல இருந்தாலும் அந்தப் படத்துகுப் போயிருவேன்.
ஹாரர், காமெடி என எல்லா ஜானர்களிலும் டைரக்ட் செய்திருக்கீங்க. இருந்தாலும் காமெடியை நன்றாகக் கையாள்கிறீர்கள் என்று பெயர் வந்திருக்கிறதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?
சின்ன வயதிலிருந்தே காமெடி படங்கள் பார்க்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த காலத்துல கவுண்டமனி சார் எந்த போஸ்டர்ல இருந்தாலும் அந்தப் படத்துகுப் போயிருவேன். காமெடி படங்களுக்கு நான் பெரிய ரசிகன். சமீபத்துல தமிழ்ல எனக்குப் பிடிச்ச காமெடி நடிகர்கள் படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்து ஏமார்ந்துபோனேன். இப்போ பெரிசா காமெடி படங்கள் வருவதில்லை. அதனாலதான் ‘கலகலப்பு’ 3வது பாகத்தை எடுக்க ப்ளான் பண்ணியிருகேன். காமெடி படங்கள் பார்க்கவும், இயக்கவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலதான் என்னோடு காமெடி படங்கள் நல்ல இருக்குனு நினைக்கிறேன். காமெடிங்கிறது ஒன் மேன் ஷோ கிடையாது எல்லாரும் சேர்ந்து பண்றது. கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், யோகி பாபு என சிறந்த காமெடி நடிகர்கள்தான் என்னோடு காமெடி படங்கள் ஹிட்டாக முக்கியக் காரணம். காமெடி எழுதுவதற்கும் எனக்கு நல்ல டீம் அமைந்தார்கள். எழுத்தாளர், இயக்குநர், நடிகர் என எல்லாரும் சேர்ந்து செய்யுற மேஜிக்தான் காமெடி.
நான் சீரியஸா படம் எடுத்தா யாரும் விரும்ப மாற்றாங்க
பேய்ப் படமோ, காமெடி படமோ, சுந்தர்.சி படம்னா இதெல்லாம் இருக்கும்ன்னு ஒரு டெம்ப்ளேட் உருவாகிடுச்சு. இதெல்லாம் பிரேக் பண்ணி ஃப்யூச்சர்ல ஒரு படம் பண்ணணும்ங்கற எண்ணம் இருக்கா?
சினிமாவுல ஒரு சிக்கல் இருக்கு. ஒருத்தர் படம்னா இப்படிதான் இருக்கும்னு ஒரே வட்டத்துல அவங்களை அடைச்சுருவாங்க. சங்கிலி போட்டுக் கட்டுன மாதிரி ஒரே ஜானர்ல நான் மாட்டிக்கிட்டேன். நான் சீரியஸா படம் எடுத்தா யாரும் விரும்ப மாட்றாங்க. சுந்தர் சி படம்னா இப்படித்தான் இருக்கும்னு செட்டாகிட்டாங்க. அதை மாத்திப் பண்ணலாம்னு பாத்தா யாருக்கும் பிடிக்க மாட்டிங்குது. உதாரணத்துக்கு, நான் எடுத்த ‘காஃபி வித் காதல்’ படத்தைப் பார்த்துட்டு நிறையபேர் பிடிக்கலைனு சொன்னாங்க. ‘ஜீவா, யோகிபாபு, ஶ்ரீகாந்த், ஜெய் எல்லாரும் இருந்தாங்க. நல்ல காமெடி படமா இருக்குனு நெனச்சு ஏமாந்துட்டோம்’ என்றார்கள். விஷால வச்சு எடுத்த ‘ஆக்ஷன்’ படத்தை பார்த்துட்டு, ‘ஆக்ஷன் படம்னா வேற இயக்குநர் படத்துக்குப் போயிருப்போம். நல்ல காமெடி இருக்கும்னுதான் உங்க படத்துக்கு வர்றோம்’ என்றார்கள். இப்படி ஒரு டெம்ப்ளேட்டுக்குள்ள எல்லாம அடைச்சுட்டாங்க. இந்த டெம்ப்ளேட்டை ஒடைச்சு படம் பண்ணனும்னுதான் ஆசை இருக்கு. ஆனால், மக்கள் அதை ஏத்துக்கனும்.
பிரியதர்ஷனோட மின்னாரம், காக்கா குயில்னு ரெண்டு மலையாள படத்தை தமிழில் ரீமேக் பண்ணிருக்கீங்க. நீங்க நடிச்ச தலைநகரம், வீராப்பு, முத்துன கத்திரிக்காயும் மலையாள ரீமேக்தான். உங்களுக்கும் மலையாள சினிமாவுக்குமான உறவு என்ன?
நான் கோயம்புத்தூர். கேரளா பக்கத்துல இருக்கிறதால அங்க நிறைய மலையாளப் படம் தியேட்டர்ல ஓடும். மலையாளத்துல மம்மூட்டி, மோகன்லால் வளர்ந்து உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. அவர்கள் படமெல்லாம் நிறைய பார்த்து மலையாள சினிமாவோட ரசிகராகிட்டேன். பிரியதர்ஷன் – மோகன்லால் காம்பினேஷனெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால், என்னோட படங்களில் மலையாள படங்களின் தாக்கம் நிறைய இருக்கும்.
‘மின்னாரம்’ படத்தை ‘அழகான நாட்கள்’னு ரீ-மேக் பண்ணியதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. ‘அழகான நாட்கள்’ படத்திற்கு முதலில் பண்ண கதை வேறு. சிம்ரன் அப்படத்தில் நடித்தபோது, ‘பாலச்சந்தர்’ சார் படத்துல கமிட்டாகியிருந்தாங்க. அவங்க டேட் கொஞ்சம் பிரச்னையாக இருந்தது. படம் எடுக்க லேட்டானா கார்த்தி சார் டேட்டும் வீணாகிவிடும் என்பதால் 30 நாள்களில் படம் எடுக்க வேண்டிய கட்டாயம்.
அதனால், உடனே பண்ணியாக வேண்டும் என்று பிரியதர்ஷனோட ‘மின்னாரம்’ படத்தை ரீ-மேக் செய்தோம். ‘தலைநகரம்’ ரீ-மேக் என்பது எனக்கு சத்தியமா தெரியாது. எங்க அம்மாவுக்கு 92 வயது. அவங்க ‘தலைநகரம்’ படம் பார்த்துட்டு அது மோகன்லால் படம் மாதிரியே இருக்குனு சொன்னாங்க. அப்பதான் எனக்கு ஷாக் ஆச்சு. எனக்கு ரொம்ப நாள் அது மலையாள பட கதைனு தெரியாது. அந்த அளவுக்கு அந்தக் கதையை என்கிட்ட திறமையா சொன்னார் சிராஜ். இதை ரைட்ஸ் வாங்கி தெலுங்கில் பண்ணாங்க.
‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தமிழ்ல ரீ-மேக் செய்ய ஆசை
‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தமிழ்ல ரீ-மேக் செய்ய எனக்கு ஆசை. ரொம்பப் பிடிச்ச படம். தமிழ்ல அதை பண்ண பிரித்விராஜ் கதாபாத்திரல் கார்த்தியையும், பிஜு மேனன் கதாபாத்திரத்தில் சத்யாராஜ் சாரையும் நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும்.
இது ரீ-ரிலீஸ் சீசன்…. அப்படி சுந்தர் சி படங்கள்ல ஒரு படத்த ரீ-ரிலீஸ் செய்யலாம்னா எதை செய்யலாம்? ஏன்?
‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தை ரீ-ரிலீஸ் செய்தால் நல்லா இருக்கும். ‘அழகிய லைலா’ பாட்டில் ரம்பாவின் கெவுனில் ஓட்டை இருக்கும். அதை மட்டும் சிஜியில் சரி செய்ய வேண்டும். அது இன்னும் எனக்கு ஒரு குறையாக இருக்கு. ரீ-மாஸ்டர் செய்யும்போது இதையும் சரிசெய்ய வேண்டும்.