உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த வைஷ்ணவி, தன் குடும்பத்தினர் சிலருடன் மே 2-ம் தேதி நள்ளிரவு 1:15 மணியளவில் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அப்போது BMW கார் ஒன்று அவர்களை துரத்தும் வீடியோ காட்சி காரின் டேஷ்போர்டில் இருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோவின் பரபரப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, வைஷ்ணவியிடம் விவரம் கேட்டிருக்கிறது.
வைஷ்ணவி இது குறித்து புகார் அளிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துவிட்டார். ஆனால், காவல்துறை தானாக முன்வந்து இதை விசாரித்தது. இது தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, `ஐ.எஃப்.எஸ் வில்லாஸ் அருகே இருவழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு வாகனங்களுக்கு மத்தியில் சிறிய விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக ஐ.பி.சி பிரிவுகள் 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 279 ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு காரில் அவர்களை துரத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட சங்கேத் பாடி, விபின் மாலிக், அருண் ஆகியோரை கைது செய்திருக்கிறோம்’ எனத் தெரிவித்திருக்கிறார். பார்ப்போரை பதறவைக்கும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.