நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது

காத்மாண்டு:

நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) கட்சியில் கடந்த சில தினங்களாக உட்கட்சி பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. கட்சி தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவுக்கு எதிராக கட்சியின் மத்திய குழு தலைவர் அசோக் ராய் தலைமையிலான குழுவினர் போர்க்கொடி தூக்கினர்.

இந்த விவகாரம் முற்றிய நிலையில், கட்சி இரண்டாக உடைந்துள்ளது. அசோக் ராய் தலைமையிலான குழுவினர் தனி அணியாக பிரிந்து, தனிக்கட்சி தொடங்கி உள்ளனர். கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர். தாய் கட்சியில் உள்ள நேபாளம் என்ற பெயரை நீக்கிவிட்டு, புதிய கட்சிக்கு ஜனதா சமாஜ்பதி கட்சி (ஜே.எஸ்.பி.) என பெயர் வைத்துள்ளனர். 29 மத்திய குழு உறுப்பினர்கள், 7 எம்.பி.க்கள் இணைந்து புதிய கட்சிக்கு விண்ணப்பித்திருப்பதாக எம்.பி. பிரதீப் யாதவ் தெரிவித்தார்.

ஜனதா சமாஜ்பதி கட்சியை புதிய அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

சமீபகாலமாக ஆளும் கூட்டணிக்கும் நேபாள ஜனதா சமாஜ்பதி தலைவர் உபேந்திர யாதவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்வதற்காக பிரதமர் பிரசந்தாவின் ஆலோசனையின் பேரில் அசோக் ராய் கட்சியை உடைத்து புதிய கட்சியை பதிவு செய்திருப்பதாக சிலர் குற்றம்சாட்டினர்.

எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் மற்றும் ஆளும் கூட்டணியில் உள்ள மாதவ் குமார் தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் (ஐக்கிய சோசலிஸ்ட்) கூட்டணி அமைக்க யாதவ் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகின. பிரசந்தா தலைமையிலான ஆட்சியை கவிழ்த்துவிட்டு, யாதவுக்கு பிரதமர் பதவியை வழங்க நேபாள காங்கிரஸ் தலைவர் தலைவர் ஷேர் பகதூர் தியூபா முன்வந்ததாகவும் தகவல் வெளியானது.

உபேந்திர யாதவ் எதேச்சதிகார வழியில் கட்சியை நடத்தி வருவதால், தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்ய நேரிட்டதாக அசோக் ராய் தலைமையிலான பிரிவின் தலைவர்கள் தெரிவித்தனர்.

கட்சியில் இருந்து விலகிய, வனம் மற்றும் சுற்றுச்சூழல் மந்திரி நவல் கிஷோர் சா சுடி கூறுகையில், ஆளும் கூட்டணியை உடைக்க தலைவர் முயற்சித்த பிறகு புதிய அணியை உருவாக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றார். தற்போதைய அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்காகவே இந்த முடிவை எடுத்ததாகவும், அரசுக்கான ஆதரவு தொடரும் என்றும் அவர் கூறினார்.

ஜே.எஸ்.பி.-என். கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு இப்போதைக்கு கூட்டணி அரசின் ஸ்திரத்தன்மையை பாதிக்காது என்று சி.பி.என்.-மாவோயிஸ்ட் மையத்தின் மத்தியக்குழு உறுப்பினர் சுனில் குமார் மானந்தர் கூறினார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்) மற்றும் ஜே.எஸ்.பி.-என் ஆகியவை ஆதரவை வாபஸ் பெறாத வரையில் பிரசந்தா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.