சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு: காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் பெண் போலீஸ் அளித்த புகாரின் அடிப்படையில், சேலம் சைபர் கிரைம் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின்படி, ஐந்து பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா வழக்கிலும் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது! – முன்னதாக, சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் தங்கியிருந்த இருவரின் காரில் கஞ்சா இருந்ததை கண்டறிந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ராஜரத்தினம், ராம்பிரபு ஆகியோரை கஞ்சா வழக்கில் பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது சவுக்கு சங்கர் மீதும் வழக்குப் பதியப்பட்டிருந்தது. இந்நிலையில், தேனி மாவட்டத்தின் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கோவைக்கு வந்தனர். கோவை மத்திய சிறைக்குச் சென்று, அங்கு அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை, கஞ்சா வழக்கிலும் மீண்டும் கைது செய்தனர்.
இதனிடையே, “கோவை சிறையில் சவுக்கு சங்கர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சட்ட நடவடிக்கைகளும் நீதியும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பது என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே, கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
“இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி” – முதல்வர் பெருமிதம்: “மு.க.ஸ்டாலின் என்றால் செயல், செயல், செயல் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளேன்” என 3 ஆண்டுகள் திமுக ஆட்சி நிறைவடைந்து 4-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தற்போது இந்த ஆட்சி 3 ஆண்டுகளை முடித்துவிட்டு, நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 3 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பல திட்டங்களால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தினந்தோறும் பயனடைந்த மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே அதற்கு சாட்சி” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழகத்தில் தடையில்லா சீரான மின்சாரம்…”: கோடைக்காலத்தில் பரவலாக மின் வெட்டு, மின் தட்டுப்பாடு பிரச்சினைகள் சார்ந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், “கடந்த மூன்று ஆண்டுகளாக, மின்சாரத் துறையில் மேற்கொண்டு வரும் சீரிய நடவடிக்கைகளின் பயனாக தமிழகத்தில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மட்டுமல்லாமல் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்ட விவசாய மின் இணைப்புகளுக்கு இன்னும் அதிகப்படியான மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கிட தேவையான அனைத்து மேம்பாட்டு பணிகளும், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
இரு தினங்களுக்கு எங்கெல்லாம் கனமழை வாய்ப்பு?: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமன வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்: மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மேற்கு வங்க அரசு சார்பில் தொடரப்பட்ட மேல் முறையீடு வழக்கில், “மேற்கு வங்க அரசு எதற்காக இத்தனை அதிகமான எண்ணிக்கையில் பணியிடங்களை உருவாக்கி, வெயிட்டிங் லிஸ்ட் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை பணியமர்த்தியது. தேர்வு முறையையே எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோது இது தேவையா?” என மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாகக் கேள்விகளை முன்வைத்தது. குறிப்பாக, “நியாயமான பணி நியமனங்களிலும் ஊழல் என்றால் என்னாவது? மக்களுக்கு நம்பிக்கை போய்விடாதா?” என்று கேள்வி எழுப்பியது.
மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவு: மக்களவை 3-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 94 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதனிடையே, இரண்டாவது கட்ட தேர்தலில் மத்திய பிரதேசத்தின் பேதுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் அசோக் பலாவி உயிரிழந்ததால் அந்தத் தொகுதிக்கான தேர்தல் 3-வது கட்டத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. இன்றைய வாக்குப்பதிவில் மேற்குவங்கத்தில் மட்டும் ஓரிடத்தில் வன்முறைச் சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தத் தேர்தலில் களத்தில் 1300 வேட்பாளர்கள் களம் கண்டனர். இவர்களில் 120 பேர் பெண்கள்.
“வாக்குப்பதிவு புள்ளி விவரங்களில் முரண்” – கார்கே கவலை: “2024 மக்களவைத் தேர்தல் என்பது ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான போராட்டம்” எனக் குறிப்பிட்டு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடித்தில், முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அவற்றுக்கான இறுதி வாக்குபதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிட்டது பேசுபொருளாக மாறியது. குறிப்பாக முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை 11 நாட்கள் கழித்தும், இரண்டாம் கட்ட தேர்தலில் பதிவான இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை 4 நாட்கள் கழித்தும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வெளியிட்ட தரவுகளிலும் தேர்தல் நடந்து முடிந்த அன்று வெளியான சதவீதத்துக்கும், நீண்ட தாமதத்துக்கு பிறகு வெளியான வாக்குப்பதிவு சதவீதத்திற்கும் சில முரண்பாடுகள் இருந்தன. இந்நிலையில், இத்தகைய முரண்பாடுகள் கவலை அளிக்கும் விதத்தில் இருப்பதாக கார்கே தெரிவித்துள்ளார்.
‘வாக்கு ஜிகாத்’ vs ‘ராம ராஜ்ஜியம்’ – மோடி பேச்சு: மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோனில் பேசிய பிரதமர் மோடி, “இண்டியா கூட்டணிக் கட்சிகள் தத்தம் வாரிசுகளைக் காப்பாற்றவே தேர்தலில் போட்டியிடுகின்றன. அவர்களுக்கு மக்கள் நலன் பற்றி அக்கறை இல்லை. மக்களின் சுக, துக்கங்கள் பற்றிக் கவலை இல்லை. இந்தத் தேர்தலில் வெற்றி பெறப்போவது வாக்கு ஜிகாத்தா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று பேசினார்.
கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிட்டுமா?: “சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், அவர் தனது அலுவல் பணிகளைச் செய்ய முடியாது. அது அடுக்கடுக்கான விளைவுகளை ஏற்படுத்தலாம்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இடைக்கால ஜாமீன் குறித்த விசாரணையை மே 9-ம் அல்லது அடுத்த வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஜெயக்குமார் மரண வழக்கு: தங்கபாலுவிடம் விசாரணை: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து 8 தனிப்படைகளை அமைத்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன், ஜெயக்குமாரின் மனைவி மற்றும் மகன்கள், உறவினர் டாக்டர் செல்வகுமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் 15 தினங்களுக்குள் ஆஜராகும்படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவிடம் நெல்லையில் உள்ள தனியார் விடுதியில் தனிப்படை ஆய்வாளர் கண்ணன் சுமார் அரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின்போது, தங்கபாலு தனது பதிலை எழுத்து மூலமாகவும் விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தங்கபாலு, “என்னிடம் தேர்தலுக்காக 11 லட்சம் ரூபாய் ஜெயக்குமார் தந்ததாகவும், அதனை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனிடம் வாங்கிக் கொள்ளுமாறு நான் கூறியதாகவும் ஜெயக்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது முற்றிலும் பொய்யான ஒரு தகவல். இதனை நான் விசாரணையின்போது தெளிவாக கூறினேன். காவல் துறை விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது” என்று கூறினார்.
கொடைக்கானலில் அமலுக்கு வந்தது ‘இ-பாஸ்’: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இ-பாஸ் அமலுக்கு வந்தது. க்யூஆர் கோடு மூலம் சோதனை செய்த பிறகே சுற்றுலா வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றன.
பாஜக சாடிய சோனியா காந்தி: “அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்க காங்கிரஸுக்கு வாக்களியுங்கள், ஒன்றிணைந்து வலிமையான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம்” எனக் கூறி வாக்காளர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “அரசியல் ஆதாயத்துக்காக வெறுப்பை ஊக்குவித்து வருகிறது பாஜக. காங்கிரஸ் கட்சியும் நானும் எப்போதும் அனைவரின் முன்னேற்றத்துக்காகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், நாட்டை வலுப்படுத்துவதற்காகவும் போராடி வருகிறோம். நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதை காணும்போது வேதனையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
லாலு கருத்தை முன்வைத்து பிரதமர் மோடி கடும் தாக்கு: ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்த பேச்சு, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றி சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை வழங்கும் என்பதை தெளிவாக்கியுள்ளது என்று பாஜக கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி, முஸ்லிம்களுக்கு முழுமையாக இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று லாலு பேசியுள்ளார். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டை அவர்கள் (இண்டியா கூட்டணி) பறிக்க நினைக்கிறார்கள் என்பதே இதற்கு அர்த்தம்” என்று குற்றம்சாட்டினார்.