கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளர் வீரேந்திர ராம் ரூ.10,000 லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்டார். ஆனால், அவருடைய கைதுக்குப் பிறகே பல முக்கியத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. வீரேந்திர ராமிடம் அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில், இந்த ஊழலில் பல்வேறு துறை அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதும், இந்த லஞ்சம் வாங்குவதற்காக ஒரு வலைப்பின்னல் ஏற்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
அந்த விசாரணையின் அடிப்படையில் கடந்த ஆண்டு மே 9-ம் தேதி ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு ஒரு ரகசிய கடிதத்தை அமலாக்கத்துறை அனுப்பியது. அதில், ‘ஒப்பந்ததாரர்களிடமிருந்து டெண்டர்களை ஒதுக்குவதற்கு கமிஷன் என்ற பெயரில் லஞ்சம் வாங்குவதாக வீரேந்திர ராம் தெரிவித்தார். ஏப்ரல் 14, 2023 அன்று ஒப்பந்ததாரர்களிடமிருந்து மொத்த டெண்டர் மதிப்பில் 3.2 சதவிகிதமும்… இதில் வீரேந்திர ராமின் பங்கு 0.3 சதவிகிதமும் பெறப்பட்டிருக்கிறது’ என்ற தகவல் இடம்பெற்றிருந்தது.
ஆனால், அந்தக் கடிதம் பல்வேறு அதிகாரிகளிடம் சென்றதாகத் தகவல் வெளியானது. வீரேந்திர ராமின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. அதன் தொடராகத்தான் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சீவ் லால் உள்ளிட்ட பல முக்கிய சந்தேக நபர்களைக் குறிவைத்து மே 6 அன்று சோதனைகளை நடத்தியது.
இந்த சோதனையின்போது சஞ்சீவ் லாலின் கூட்டாளியான ஜஹாங்கீரின் இல்லத்தில் ரூ.34 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். மற்றொரு நபரின் அலுவலகத்தில் ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அமைச்சர் ஆலம்கீர் ஆலம் தொடர்பான சோதனைகளின்போது அதிகாரிகள் பல ஆவணங்களை மீட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர் விரைவில் விசாரிக்கப்படலாம் என்ற தகலும் வெளியாகி ஜார்கண்ட் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆலம்கீர் ஆலம்,“சஞ்சீவ் லால் ஓர் அரசு ஊழியர். எனக்கு முன்பு அவர் வேறு இரண்டு அமைச்சர்களுடன் பணியாற்றியவர். தனிப்பட்ட செயலாளர்களை அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில்தான் தேர்வு செய்கிறோம்.
அந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் அவரை என்னுடன் பணியாற்றவும் தேர்வு செய்தோம். இப்போது நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அதையேதான் நானும் பார்க்கிறேன். விசாரணை முடியும் வரை எதுவும் சொல்ல முடியாது” எனத் தெரிவித்திருக்கிறார்.