உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் `அரசியல் வாரிசாக’ அறிவித்தார். கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியையும் கொடுத்தார். இந்நிலையில், வாரிசாக அறிவிக்கப்பட்ட 5 மாதத்திற்குள் ஆகாஷ் ஆனந்தை கட்சி பொறுப்பில் இருந்து மாயாவதி நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தில் ஆகாஷ் ஆனந்த்,“ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசு புல்டோசர் அரசாங்கம். துரோகிகளின் அரசாங்கம்.இந்த நாட்டின் இளைஞர்களை பசியுடன் விட்டுவிட்டு, வயதானவர்களை அடிமைப்படுத்தும் ஒரு பயங்கரவாத அரசாங்கம்” என பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்தார்.
அவரின் இந்த கருத்துகள் உத்தரப்பிரதேசத்தின் தலைப்பு செய்தியாக வலம் வந்தது. அதைத் தொடர்ந்து, இந்த பேச்சை கவனத்தில் எடுத்த உத்தரப்பிரதேச காவல்துறை, ஆகாஷ் ஆனந்த் மற்றும் அவருடன் இருந்த கட்சி வேட்பாளர்கள் மூவர் உள்ளிட்ட நான்கு பேர் மீது நடத்தை விதி மீறல் வழக்கை பதிவு செய்தது.
இந்த நிலையில் தான் ஆகாஷ் ஆனந்தை கட்சி பொறுப்பில் இருந்து மாயாவதி நீக்கி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”ஆகாஷ் ஆனந்த் முதிர்ச்சியடையும் வரை கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். கட்சியின் நலனை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அவரது தந்தை ஆனந்த் குமார் முன்பு போலவே கட்சியிலும், இயக்கத்திலும் தனது பொறுப்புகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவார். பகுஜன் சமாஜ் ஒரு கட்சி மட்டுமல்ல. பாபாசாஹேப் அம்பேத்கர் தொடங்கிய பணியின் தொடர்ச்சியான ஒரு இயக்கம். இதற்காக கன்சிராம் மற்றும் நான் ஒட்டுமொத்த வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளோம்.
இந்த இயக்கத்தை முன்னெடுத்து செல்ல இளைய தலைமுறை உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் ஆகாஷ் ஆனந்த் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் எனது அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்டார்” என்றார்.
தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாயாவதியின் அரசியல் வாரிசு ஆகிய இது பதவிகளையும் ஆகாஷிடமிருந்து மாயாவதி பறித்துள்ளார். மாயாவதியின் இளைய சகோதரர் மகனான ஆகாஷ் ஆனந்த் லண்டனில் எம்.பி.ஏ முடித்துள்ளார். 2019-ம் ஆண்டு கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது ஆகாஷ் ஆனந்த் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசினார். இதனால் அவர் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற தேர்தல் ஆணையம் தற்காலிக தடை விதித்தது. கடந்த மக்களவை தேர்தலில் ஆகாஷ் முக்கிய பங்கு வகித்தார். பகுஜன் சமாஜ் கட்சிக்கு உத்தர பிரதேசம் உட்பட வடமாநிலங்களில் கணிசமான செல்வாக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88