• அடுத்த 25 ஆண்டுகளில் இலங்கை முழுவதும் விவசாய நவீனமயமாக்கல் திட்டம்
• ஒரு குடும்பத்திற்கு 6000 டொலர்கள் முதலீடு- ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன.
இலங்கையில் விவசாய மற்றும் வனப் பாதுகாப்புத் திட்டமொன்றில் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையின் காலநிலை மாற்ற செயலகம் சார்பாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, காலநிலை இடர் மன்றம் (CVF) சார்பாக அதன் பொதுச் செயலாளர் முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷிட் மற்றும் போர்த்துக்கலின் Nativa Capital நிறுவனம் சார்பில் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கார்லோஸ் கோமஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
.
விவசாய விளைச்சல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட மற்றும் நிலைபேறான விவசாய முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையில் உள்ள கிராமப்புற சமூகங்களின் வீட்டு விவசாயத்தை மேம்படுத்துவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையில் உள்ள பல விவசாய நிலங்கள் தற்போது சிறிய அளவில் உள்ளன. எனவே, குறைந்த விளைச்சல் மற்றும் குறைந்த வருமானம் ஆகியவற்றால் இவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் 15,000 விவசாயிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பையும் தொழில்நுட்ப அறிவையும் வழங்கும் முன்னோடித் திட்டம் அனுராதபுரம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடங்கியுள்ள விவசாயம் மற்றும் காடுவளர்ப்புத் திட்டங்கள், காலநிலை பாதிப்பு மன்றத்தின் (CVF) ஆதரவுடன் இலங்கையால் வரையப்பட்ட இலங்கையின் காலநிலை தாங்கும் திட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நிலையான விவசாயத்தின் மூலம் வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று 07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன,
“ நவீன விவசாயத்தை உருவாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தின் பிரகாரம், விவசாயத்திற்கான நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க போர்த்துக்கேய நிறுவனம் ஒன்று முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இது சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக அநுராதபுரம் மாவட்டத்தில் 15,000 குடும்பங்களும் 15,000 ஏக்கரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த முன்னோடித் திட்டத்தில் 15 குடும்பங்களும் பதினைந்து ஏக்கர்களும் இணைக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு குடும்பத்திற்கு சுமார் 6000 அமெரிக்க டொலர்கள் செலவை முதலீட்டு நிறுவனம் ஏற்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி அடுத்த 25 ஆண்டுகளுக்கு விவசாயத்திற்கு தொழில்நுட்ப உதவி வழங்கப்படும்.
விவசாயம் தொடர்பான நவீன தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குவதும் இத்திட்டத்தின் மூலம் செய்யப்படுகிறது. மேலும், விவசாயிகளுக்கு பிரச்சினையாக இருந்த அவர்களின் விளைச்சலுக்கு சந்தையை உருவாக்க முடியும். இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொள்வனவு செய்ய முதலீட்டு நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. தற்போது மிளகாய், தக்காளி, தர்பூசணிபயிர்ச்செய்கையில் கவனம் செலுத்தி வருகின்றது.
எதிர்காலத்தில், ஏனைய பயிர்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட்டவுள்ளது. இந்த முன்னோடித் திட்டம் வெற்றியடைந்ததையடுத்து, ஏனைய மாவட்டங்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த நவீன விவசாயத்தின் மூலம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதே சமயம் விவசாயிகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும் முடியும்” என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
விவசாயத்தை நவீனமயமாக்குவது தொடர்பான மிகவும் இலட்சியமான மற்றும் பயனுள்ள திட்டத்தை இலங்கை கொண்டுள்ளது என்று இங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் மாலைத்தீவு ஜனாதிபதி, காலநிலை இடர் மன்றத்தின் (CVF) பொதுச் செயலாளர் மொஹமட் நஷிட் தெரிவித்தார்.
இலங்கையின் காலநிலை சுபீட்சத் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
காலநிலை இடர் மன்றத்தின் தலைமையில் செயற்படுத்தப்படும் இந்த திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் பொருளாதார வளர்ச்சியை சமநிலைப்படுத்தும் குறைந்த கார்பன் மேம்பாட்டு உத்திகளை ஊக்குவிப்பதுடன்,இலங்கை, பங்களாதேஷ் மற்றும் கானாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதாகவும், மேலும் ஏழு நாடுகள் ஆர்வம் காட்டும் நிலையில் இந்தத் திட்டங்கள் உலகளவில் பிரபல்யம் அடைந்து வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அவுஸ்திரேலியாவின் கொன்சல் ஜெனரல் சந்தீப் சமரசிங்க, கஸ்தூரி அனுராதநாயக்க மற்றும் பலர் கலந்துகொண்டனர்