அப்பாவுக்கு குட்பை சொல்லு… 3 வயது மகனை கொன்று, தாய் தற்கொலை; அமெரிக்காவில் அதிர்ச்சி

நியூயார்க்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் சவான்னா கிரிகர் (வயது 32). இவருடைய மகன் கெய்தன் (வயது 3). இந்நிலையில், சான் ஆன்டனியோ பகுதியில் உள்ள பூங்காவுக்கு மகனுடன் சென்ற அவர் மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பல விசயங்கள் தெரிய வந்துள்ளன. கிரிகரின் முன்னாள் கணவர் மீது அவர் கோபத்தில் இருந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு முந்தின நாள் வேலை முடிந்து திரும்பிய கிரிகர், நேராக முன்னாள் கணவரின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். ஆனால், அப்போது அவர் வீட்டில் இல்லை.

ஆத்திரத்தில் இருந்த கிரிகர் அந்த வீட்டை அடித்து, நொறுக்கி சேதப்படுத்தி விட்டு தன்னுடைய வீட்டுக்கு திரும்பினார். இதன்பின்னர் கிரிகர், வீட்டில் இருந்த திருமண புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை 2 முறை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.

முன்னாள் கணவருக்கு வீடியோ மற்றும் எஸ்.எம்.எஸ். செய்திகளையும் அனுப்பியுள்ளார். அதில் ஒன்றில், வீட்டுக்கு போனால், ஒன்றும் இருக்காது. உங்களுக்கு என உண்மையில் எதுவும் இல்லை என பேசியுள்ளார்.

இந்த நாளின் முடிவில், உங்களுக்கு என்று எதுவும் இருக்காது என்றும் அவர் பேசியுள்ளார். கிரிகர் மற்றொரு வீடியோவில், தன்னுடைய 3 வயது மகனிடம், அப்பாவுக்கு குட்பை சொல்லு என கூறியிருக்கிறார். இதனால், வாழ்க்கையை முடித்து கொள்ளும் முடிவை அவர் எடுத்துள்ளது தெரிகிறது.

கடைசியாக பூங்காவில் இருவரும் அமர்ந்திருக்கும் காட்சிகள், கிரிகரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போனில் இருந்துள்ளது. அந்த இடத்தில் இருந்தே அவர்கள் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன. இதில், அவர்களின் தலை பகுதிகளில் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, தாய் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.