சென்னை: கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சிகள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருப்பூரைச் சேர்ந்த பரத் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கல்வி நிறுவனங்களில் கல்வி சாராத கூட்டங்கள், நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தக் கூடாது. கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த வேண்டும், என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், திருச்சி மற்றும் வேலூரில் உள்ள தனியார் பள்ளிகளில் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சிகளால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம், அரசின் உத்தரவுகள் பின்பற்றவில்லை. இதுதொடர்பாக நான் அளித்த மனுவை அரசு பரிசீலிக்கவில்லை. எனவே, கல்வி நிறுவன வளாகங்களில் வணிக ரீதியிலான கண்காட்சிகளை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.