கோவை: காட்டுக்குள் இருந்து வெளியேறிய பாகுபலி யானை, பவானி ஆற்றுக்கு செல்ல வழித்தடம் தெரியாமல், கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் வீடு, வீடாக வாசலில் நின்றபடி சென்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, பாகுபலி எனப்படும் ஒற்றை ஆண் காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது. மாலை நேரங்களில் காட்டை விட்டு வெளியேறி, ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சாப்பிடுவது, பவானி ஆற்றில் நீர் அருந்துவது, விடியற்காலையில் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று விடுவது என மேற்கண்ட செயல்களை இந்த யானை வாடிக்கையாக செய்து வருகிறது.
பின்னர், திடீரென சில மாதங்கள் அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்து விடும். சில மாதங்கள் கழித்து மீண்டும் ஊருக்குள் தொடர்ச்சியாக உலா வரத் தொடங்கும். இந்த யானை மனிதர்களை தாக்க முற்படுவதுமில்லை, மனிதர்கள் விரட்ட முயன்றால் பயப்படுவதுமில்லை. கடந்த இரு மாதங்களாக சமயபுரம், ஓடந்துறை, தாசம்பாளையம், நெல்லித்துறை பகுதிகளில் நடமாட தொடங்கியுள்ள பாகுபலி யானை நேற்று (மே 7) இரவு பவானி ஆற்றில் நீர் அருந்த வழக்கம் போல் சமயபுரம் என்னுமிடத்தில், இரு புறமும் வீடுகள் உள்ள குடியிருப்பு பகுதி வழியே வந்தது.
நெல்லிமலை காட்டில் இருந்து பாகுபலி யானை வெளியேறினால் எப்போதுமே இவ்வழியை தான் ஆற்றுக்கு செல்ல பயன்படுத்துவது வழக்கம். எனவே, பாகுபலி யானை வந்தால் மேற்கண்ட தெருவில் உள்ள மக்கள் வீடுகளில் பதுங்கி விடுவர். அதன்படி, நேற்று இரவும் வனத்தை ஒட்டியுள்ள சாலையை கடந்து தெருவுக்குள் நுழைய முற்பட்ட இந்த யானைக்கு, இதன் பாதையில் ஏதோ மாற்றம் தெரியவே தயங்கியபடி, அங்குள்ள சாலை நடுவிலேயே சற்று நேரம் நின்றது.
பின்னர், தெருவுக்குள் புகுந்து தெரு முனையில் உள்ள காலி இடத்தை கடந்து ஆற்றுக்கு செல்ல யானை சென்றபோது அங்கு காலியிடம் தோட்டமாக மாற்றப்பட்டு வேலி அமைக்கப்பட்டதை கண்டு குழம்பியதாக தெரிகிறது. தோட்டத்தில் இருந்தவர்கள் டார்ச் லைட் அடித்து விரட்டவே நாம் தான் பாதை மாறி வந்து விட்டோமோ என நினைத்து யானை அங்கிருந்து மெல்ல திரும்பியது.
வழியில் உள்ள வீடுகளின் வாசலில் ஆற்றுக்கு செல்ல வழி கேட்பது போல் சற்று நேரம் நின்றபடி பாகுபலி யானை காத்திருந்தது. பின்னர் வேறு வழியின்றி வந்த வழியே திரும்பி சாலைக்கு வந்தது. இதன் பின்னர் மாற்று வழி தேடி ஒய்யாரமாக சாலை வழியே நடந்து காட்டுக்குள் சென்றது. தொடர்ந்து இன்று (மே 8) இரவும் இதேபோல், பாகுபலி யானை சமயபுரம் பகுதிக்கு இரவு வந்தது. இந்த யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.