புதுடெல்லி: அதானி மற்றும் அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் கறுப்புப் பணத்தைப் பெற்றுள்ளது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ராகுல் காந்தி “பாஜக ஊழல்களின் சாரதி மற்றும் உதவியாளர் யார் என்பது நாட்டுக்குத் தெரியும்” என்று விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, “மோடி ஜி, பயப்படுகிறீர்களா?. பொதுவாக பூட்டிய அறைகளில் தான் அதானி மற்றும் அம்பானியைப் பற்றி பேசுவீர்கள். பொதுவெளியில் அதானி மற்றும் அம்பானி பற்றி நீங்கள் பேசுவது இதுவே முதல்முறை. அவர்கள் இருவரும் காங்கிரஸுக்கு டெம்போக்களில் பணம் தருகிறார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும். இதில் உங்களுக்கு தனிப்பட்ட அனுபவம் எதுவும் இருக்கிறதா?. ஒரு காரியம் செய்யுங்கள். அதானியும், அம்பானியும் காங்கிரஸுக்கு டெம்போவில் பணம் அனுப்பினார்களா என்பதை அறிய சிபிஐ அல்லது அமலாக்கத் துறையை சோதனை நடத்துங்கள். பயப்பட வேண்டாம், மோடி ஜி.” என்று விமர்சித்துள்ளார்.
அதே வீடியோவில், “இதை மீண்டும் சொல்கிறேன். நரேந்திர மோடி அம்பானி மற்றும் அதானிக்கு எவ்வளவு பணம் கொடுத்தாரோ, அதே அளவு இந்தியாவின் ஏழை மக்களுக்கு நாங்கள் கொடுப்போம். மகாலக்ஷ்மி யோஜனா, பெஹ்லி நௌக்ரி பக்கி திட்டம் மூலம் கோடிக்கணக்கான மக்களை கோடீஸ்வரர்களாக்கும். பாஜகவினர் 22 கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளனர். நாங்கள் கோடிக்கணக்கான மக்களை கோடீஸ்வரர்களாக உருவாக்குவோம்” என்று ராகுல் காந்தி உறுதியளித்தார்.
भाजपा के भ्रष्टाचार के टेम्पो का ‘ड्राइवर’ और ‘खलासी’ कौन है, देश जानता है। pic.twitter.com/62N5IkhHWk
பின்னணி: முன்னதாக, தெலங்கானா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்,“பல ஆண்டுகளாக காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) 5 தொழிலதிபர்களைப் பற்றி பேசினார். பின்னர் அம்பானி, அதானி பற்றி மட்டும் அவர் பேசத் தொடங்கினார். இப்போது அவர்கள் பற்றியும் பேசாமல் திடீர் மவுனம் காத்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ராகுல் காந்தி மற்றும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அம்பானி மற்றும் அதானி பற்றி அவதூறு பேசுவதை நிறுத்தி விட்டனர். ஏன்?
நான் காங்கிரஸ் இளவரசரிடம் (ராகுல் காந்தி) ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அம்பானி, அதானியிடமிருந்து நீங்கள் எவ்வளவு பணம் பெற்றீர்கள்? நடைபெறும் தேர்தலுக்காக அவர்களிடமிருந்து காங்கிரஸ் கட்சி எவ்வளவு நிதி பெற்றது? எத்தனை வாகனங்களில் பணத்தைப் பெற்றது? ஏதோ ஒன்று நடந்திருப்பதாக நான் உணர்கிறேன். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தேசத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று பேசினார்.