புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து வரும் வெள்ளிக்கிழமை (மே 10) உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற அமர்வின் தலைவர் நீதிபதி சஞ்சீவ் கண்ணா, வெள்ளிக்கிழமை வழக்கு தொடர்பான சமர்ப்பிப்புகளுடன் விசாரணைக்குத் தயாராக இருக்கும்படியும், தேவைப்பட்டால் அன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜுவிடம் தெரிவித்தார்.
முன்னதாக, அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து முதல்வர் கேஜ்ரிவால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வலியுறுத்தினார். இதற்கு அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா கூறியது: ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களவைத் தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடைபெறவில்லை என்றால் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்த கேள்வியே எழுந்திருக்காது. மக்களவைத் தேர்தல்நடைபெறுவதால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் அரசுஅலுவல்களில் ஈடுபடக் கூடாது. இதை கேஜ்ரிவால் தரப்பு உறுதி செய்ய வேண்டும். அமலாக்கத் துறை சார்பில் வாதிட கூடுதல் அவகாசம் கோரப்படுகிறது. இது குறித்து மே 9-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
கடந்த மார்ச் 21-ம் தேதி தான் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் ஏப்ரல் 9-ம் தேதி ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.