“இனி ஆவினையும், அரசையும் நம்பி பலனில்லை; அமுல் வந்தால் வரவேற்போம்!" – பால் முகவர்கள் சங்கம் அதிரடி

குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனத்தின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், அமுல் நிறுவனத்தை தமிழகத்தில் வரவேற்பதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின் பால்

இதுகுறித்து இச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கையில், “கூட்டுறவு பால் நிறுவனங்களுக்கெல்லாம் முன்னோடி நிறுவனமாக திகழ்ந்து இந்தியாவில் தொடர்ந்து முதலிடம் பிடித்து செயல்பட்டுவரும் அமுல் நிறுவனம், அதன் பால் மற்றும் பால் பொருட்களை தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சந்தைப்படுத்த ஏதுவாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பால் பண்ணை அமைத்து வருவதாக ஒருசில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறானதாகும்.

அமுல் நிறுவனத்தைப் பொறுத்தவரை பால் பவுடர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு வகையான பால் உபபொருட்களை அண்டை மாநிலங்களில் உற்பத்தி செய்து ஏற்கனவே தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக சந்தைப்படுத்தி வரும் சூழலில் அவற்றோடு தற்போது கூடுதலாக 140 கிராம் மற்றும் 450 கிராம் அளவுள்ள தயிர் பாக்கெட்டுகளை ஆந்திராவின் சித்தூர் மாவட்டம், பலமனேரி எனுமிடத்தில் உள்ள பண்ணையிலிருந்து உற்பத்தி செய்து ஆந்திரா, தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் சந்தைப்படுத்தி வருகிறது.

பொன்னுசாமி

ஊடகங்களில் வெளியாகியுள்ளதுபோல் தமிழ்நாட்டில் பால் பண்ணை அமைத்து, பால் வணிகத்தில் ஈடுபடும் எண்ணம் அமுல் நிறுவனத்திற்கு இருக்குமானால் அதனை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வரவேற்க தயாராக இருக்கிறது.

ஏனெனில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் தமிழ்நாட்டில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களை காக்கும் கவசமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் கடந்த காலங்களில் அமுல், நந்தினி உட்பட மற்ற மாநில கூட்டுறவு பால் நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குள் பால் கொள்முதல் மற்றும் பால் விற்பனை சந்தைக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடுமையாக எதிர்த்து ஆவின் நிறுவனத்திற்கு அரணாக நின்று செயல்பட்டது.

அதனடிப்படையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமுல் நிறுவனத்தின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஆனால், ஆவின் மற்றும் பால்வளத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளாகட்டும், பால்வளத்துறை அமைச்சர்களாக வருபவர்களாக இருக்கட்டும் ஆவினை சுரண்டுவதிலேயே குறியாக இருப்பதோடு, அதனை தடுக்கத் தவறி, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பை வீணடிக்கும் செயலுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை போய் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் வாழ்வாதாரம் குறித்து சிறிதும் அக்கறை கொள்ளாமல் வெற்று விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வருவதால் இனியும் ஆவினையும், தமிழ்நாடு அரசையும் நம்பி பலனில்லை என்கிற முடிவிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வந்திருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் – அமுல் நிறுவனம்

எனவே தமிழ்நாடு முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களுக்கு தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையான வருமானத்தையும், பொதுமக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்களின் தங்குதடையற்ற விநியோகத்தையும் அளிப்பதோடு, பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு நியாயமான கொள்முதல் விலையும், அதற்கான தொகையை நிலுவையின்றியும் வழங்கிட முன் வர அமுல், நந்தினி உள்ளிட்ட எந்த ஒரு கூட்டுறவு பால் நிறுவனங்கள் தயாராக இருந்தாலும் அவற்றுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தயாராக இருக்கிறோம் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் நிறுவனம் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அமுல் நிறுவனம் தற்போது வரை பால் பண்ணையை அமைக்கவில்லை என்றும் அமுல் நிறுவனம் பால் விற்பனையை தற்போது வரை தமிழகத்தில் தொடங்கவில்லை என்றும் பால்வளத்துறை கூறியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.