நாகர்கோவில்: தமிழகத்தின் முதல் பாஜக எம்எல்ஏஎன்ற பெருமைபெற்ற வேலாயுதன் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 73.
கன்னியாகுமரி மாவட்டம் சுங்காங்கடை அருகே உள்ள கருப்புக்காட்டைச் சேர்ந்தவர் வேலாயுதன். இவர் தனது 13-வது வயதில் 1963-ம்ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்தார்.
கடந்த 1982-ம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்தைத் தொடர்ந்து, இந்து முன்னணி நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். கடந்த 1989-ல் சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவருக்கு 4-வது இடமே கிடைத் தது.
கடந்த 1991 சட்டப்பேரவை தேர்தலிலும் தோல்வியடைந்த அவர்,3-வது முறையாக 1996 சட்டப்பேரவை தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இதன் மூலம் தமிழகத்தில் பாஜகசார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்எம்எல்ஏ என்பதோடு, தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏ என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, இவரை சிறந்த சட்டப்பேரவை உறுப்பினர் என பாராட்டி உள்ளார். கடந்த 2001, 2006 சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பாஜக மாநில துணைத்தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.
2006-ம் ஆண்டுக்கு பின் அரசியலில் இருந்து விலகி, ஆர்எஸ்எஸ் அமைப்பில் செயல்பட்டு வந்தார்.அந்த அமைப்பின் சேவாபாரதி சார்பில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளிக்கு தற்காலிகமாக இடம் தேவைப்பட்டபோது, கருப்புக்காட்டில் உள்ள தனது சொந்த வீட்டை சில ஆண்டுகள் அதற்காக வழங்கியிருந்தார். நாகர்கோவிலில் சேவாபாரதி சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான அன்பு இல்லத்தில் தங்கியிருந்தார்.
வேலாயுதத்தின் மனைவி ஜெகதாம்பிகா சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். மகள்கள் நிவேதிதா, சிவநந்தினி, மகன் ராம்பகவத் ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது. திருவனந்தபுரத்தில் மகன் வீட்டில் வேலாயுதன் வசித்து வந்தார். கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக தனது சொந்த ஊரானகருப்புக்காட்டுக்கு வந்திருந்த நிலையில், நேற்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு கருப்புக்காட்டில் இன்று காலை நடைபெறுகிறது.
தலைவர்கள் இரங்கல்: பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘தமிழகத்தின்முதல் பாஐக எம்எல்ஏ வேலாயுதன் மறைவு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சிக்குஅவரது உழைப்பு அபாரமானது. ஏழை மக்களுக்காக அவர் சிறப்பானபணியாற்றியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்’’ என்று தெரிவித் துள்ளார்.
மேலும், பாஜக தேசிய தலைவர்ஜெ.பி.நட்டா, தமிழக தலைவர் அண்ணாமலை, மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.