பியோங்யாங்: வடகொரியாவில் ‘கோயபல்ஸ்’ என்று அழைக்கப்படும், வடகொரிய அதிபர் கிம் குடும்ப பிரச்சார வியூக ஆலோசகர் கிம் கி நாம் உயிரிழந்தார். அவருக்கு வயது 94.
1966 முதல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குடும்பத்துக்கு மூன்று தலைமுறைகளாக பிரச்சார வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர் கிம் கி நாம். கிம்மின் தாத்தா கிம் Il சுங் காலம் தொடங்கி, கிம்மின் அப்பா கிம் ஜாங் இல் மற்றும் தற்போதை அதிபர் கிம் ஜாங் உன் வரை கிம் கி நாம் பிரச்சார ஆலோசனையை வழங்கியுள்ளார்.
கிம் குடும்பத்தை பொறுத்தவரை பிரச்சாரங்கள் முக்கிய அம்சமாக இருந்து வருகின்றன. ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்ஸி வழங்கும் செய்திகளை மட்டுமே ஊடகங்கள் வெளியிட முடியும்.
அதே போல மறைந்த இரண்டு தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய சிறிய கொடியை மக்கள் தங்கள் உடைகளில் குத்தியிருக்க வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி புத்தகங்களிலும், தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் கிம் குடும்பத்தினர் பற்றிய பராக்கிரம கதைகள் தொடர்ந்து இடம்பெறும். இதுபோன்ற பிரச்சார உத்திகள் அனைத்தையும் வடிவமைத்தவர் கிம் கி நாம்.
இதன் காரணமாக, ஹிட்லரின் நாஜிப் படை பிரச்சாரகராக இருந்த ஜோசப் கோயபல்ஸுடன் கிம் கி நாம் ஒப்பிடப்படுவதுண்டு. வடகொரியாவின் கோயபல்ஸ் என்று இவரை ஊடகங்கள் அழைத்துவந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கிம் கி நாம், பல்வேறு உறுப்புகள் செயலிழப்பு காரணமாக உயிரிழந்ததாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.