அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி சிக்கலில் சிக்கி கொள்பவர் காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா. அந்த வகையில் சமீபத்தில் பேசிய அவர், “இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சண்டை நடந்தது. அதைத் தவிர்த்து நாங்கள் அனைவரும் 75 ஆண்டு காலம் மகிழ்ச்சியான சூழ்நிலையில் வாழ்ந்திருக்கிறோம். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டை எங்களால் ஒற்றுமையாக வைத்திருக்க முடியும்.
கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களைப் போல தோற்றமளிக்கலாம், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடகில் உள்ள மக்கள் ஒருவேளை வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் தோற்றமளிக்கலாம். அது ஒரு பெரிய விஷயம் இல்லை. நாங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள். வெவ்வேறு மொழிகள், மதங்கள், உடைகள், வெவ்வேறு உணவு பழக்கவழக்கங்களை நாங்கள் மதிக்கிறோம்” என தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, “திரெளபதி முர்முவின் கறுப்பு நிறம் காரணமாகவே அவரை குடியரசு தலைவர் தேர்தலின் போது காங்கிரஸ் தோற்கடிக்க முயன்றது என்று இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. எனது நாட்டில் தோலின் நிறத்தினை வைத்து மக்களின் திறமையினை தீர்மானிக்க முடியுமா?. தோலின் நிறத்தினை வைத்து விளையாட இளவரசருக்கு யார் அனுமதி கொடுத்தது. நான் இன்று மிகவும் கோபத்தில் இருக்கிறேன். என்னை யார் அவதூறாக பேசினாலும் நான் கோபப்படுவதில்லை. அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் இளவரசரின் தத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ள மிகப் பெரிய அவதூறு என்னுள் கோபத்தை நிரப்பியுள்ளது.
தேர்தல் பிரசாரங்களில் அரசியல் சாசனத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆடுகிறார்கள். பிறகு நாட்டு மக்களை நிறத்தின் அடிப்படையில் அவமதிக்கிறார்களா?. இதை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. இதுகுறித்து இளவரசர் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும். இளவரசரின் மாமா அமெரிக்காவில் வசிக்கிறார் என்று இன்றுதான் நான் அறிந்து கொண்டேன். அந்த மாமா அவரின் தத்துவ ஆலோசகர் மற்றும் வழிகாட்டியுமாவார். இளவரசரின் அந்த வழிகாட்டி இன்று மிகப் பெரிய ரகசியத்தை இன்று உடைத்துள்ளார். கருமையான நிறம் கொண்டவர்கள் அனைவரும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். அதாவது அவர் நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களை தோலின் நிறத்தினை வைத்து அவமதித்துள்ளார். தோலின் நிறம் என்னாவாக இருந்தால் என்ன? நம்மைப் போல தோல் நிறம் கொண்ட கடவுள் கிருஷ்ணரை நாட்டு மக்கள் வணங்குகின்றனர்’ என்றார்.
இதையடுத்து காங்கிரஸ் ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக பிட்ரோடா கூறியிருக்கும் ஒப்புமை துரதிருஷ்டவசமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த ஒப்புமைகளில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தன்னை விலக்கிக் கொள்கிறது. மேலும் தனது பதவியில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருக்கிறார். தலைவர் கார்கேவும் ஏற்றுக்கொண்டு விட்டார். இந்த முடிவு அவரின் சொந்த விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார். இருப்பினும் தேர்தல் நேரத்தில் இந்த சர்ச்சை பேச்சு காங்கிரஸூக்கு தலைவலியை கொடுத்து இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88