ஆந்திராவில் ரூ. 8 கோடி பறிமுதல்; 2 பேர் கைது

அமராவதி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, 93 தொகுதிகளுக்கு 3ம் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் 175 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது. இதனால் பணம் பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கரிகாபாடு சோதனை சாவடியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டத்தில் உள்ள கரிகாபாடு சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குழாய்கள் ஏற்றி சென்ற லாரியின் உள்ளே ரகசிய அறை அமைத்து பணம் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக லாரியில் வந்த 2 பேரை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்துள்ளனர். ஐதராபாத்தில் இருந்து குண்டூருக்கு பணத்தை எடுத்து சென்றதாக பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.