திரையரங்குகளில் அமோக வரவேற்பைப் பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் இப்போது ஓ.டி.டியில் வெளியாகியிருக்கிறது.
குழியில் சிக்கிய சுபாஷை அவரின் நண்பர்கள் மீட்பதுதான் இந்த படத்தின் கதை. கதைக்களம் தமிழகத்தின் கொடைக்கானல் பகுதியில் நடப்பதால் இந்த மலையாளப் படத்தில் தமிழ் கதாபாத்திரங்களில் சில தமிழ் நடிகர்கள் நடித்திருந்தனர். அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் முத்து நடித்திருந்தார். தமிழில் பல திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு இத்திரைப்படம் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறது.
இதுமட்டுமின்றி ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ஏற்கெனவே அந்தப் படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் அழைத்துப் பாராட்டியிருந்தார். இப்போது இந்தப் படத்தில் நடித்த விஜய் முத்துவையும் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். இதுகுறித்து முழுமையாக தெரிந்துக் கொள்ள நடிகர் விஜய் முத்துவிடம் பேசினோம்.
நெகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கிய நடிகர் விஜய் முத்து, ” மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் எனக்கு பெரியளவிலான வரவேற்பை உருவாக்கிக் கொடுத்திருக்கு. கலையுலகின் ஜாம்பவான்கள் ரஜினி அண்ணனும், ராதா ரவி அண்ணனும் மஞ்சும்மல் பாய்ஸ் படம் பார்த்துட்டு என்னைக் கூப்பிட்டு பாராட்டியிருக்காங்க. இவங்க ரெண்டு பேரும் அவங்களோட வாழ்க்கைல பல நடிகர்களை பார்த்திருப்பாங்க. அப்படியானவர்கள் என்னைக் கூப்பிட்டு பாராட்டுகிற விஷயம் எனக்கு கிஃப்ட்தான். இதை தாண்டி எனக்கு வேற என்ன விஷயம் சினிமாவுல இருந்து கிடைச்சிட போகுது. இதுக்கு முன்னாடி ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் பார்த்துட்டு ரஜினி அண்ணன் படக்குழுவினரையும் அழைச்சு பாராட்டியிருந்தார். நானுமே ரஜினி அண்ணனோட 4 படங்கள்ல நடிச்சிருக்கேன். சின்ன கதாபாத்திரங்கள்தான் பண்ணியிருப்பேன். இருந்தாலும் அவர்கிட்ட நிறைய விஷயங்கள் பேசுவேன்.
அவரை அண்ணன்னுதான் கூப்பிடுவேன். அவரைப் பார்த்துதான் நான் சினிமா கனவோட 12 வயசுல சென்னைக்கு ஓடி வந்தேன். இப்படியான நேரங்கள்ல நான் சந்தித்த விஷயங்கள் பத்தி அவர்கூட நடிச்ச படங்களோட ஷூட்டிங் ஸ்போட்ல அவர்கிட்ட பேசுவேன். நான் சினிமாக்காக சென்னைக்கு ஓடி வரும்போது என்னோட பெற்றோர்கள் ரொம்பவே பயந்தாங்க. ‘நான் ரஜினி அண்ணனைப் பார்த்து வளர்ந்தவன். கண்டிப்பாக ஒரு நாள் ஜெயிச்சு நிப்பேன்’னு தன்னம்பிக்கையோடு என்னோட பெற்றோர்கள் கிட்ட சொல்லிட்டு சென்னைக்கு வந்தேன். இப்போ அவரே கூப்பிட்டு பாராட்டியிருக்காரு. இதுக்கு முன்னாடி ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினரை சந்திச்சு பேசும்போதே படத்தோட இயக்குநர்கிட்டையும் என்னை பத்தி ரஜினி அண்ணன் சில விஷயங்கள் சொல்லியிருக்காரு. குறிப்பாக, ‘ விஜய் முத்து என்கூட படங்கள் பண்ணியிருக்கார். அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பை நீங்க உருவாக்கிக் கொடுத்திருக்கீங்க’னு இயக்குநர்கிட்ட சொல்லியிருக்காரு. ‘ரஜினி சார் இந்த மாதிரியான விஷயங்கள் உங்களைப் பத்தி சொன்னாரு’னு இயக்குநரும் என்கிட்ட சொன்னாரு. அதுக்கு பிறகுதான் ரஜினி அண்ணனை போய் மீட் பண்ணினோம்.
என்னை பார்த்ததுமே பரிச்சயமான தம்பியைப் பார்த்த மாதிரி கூப்பிட்டு அரவணைச்சு பேசினார். ‘இந்தப் பெயரைத் தொடர்ந்து காப்பாத்தணும்’ங்கிற முயற்சில இருக்கிறதாச்க சொன்னேன். குறிப்பாக , ரஜினி அண்ணன் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை ரொம்பவே ரசிச்சிருக்காரு.
இனிமேலும் என் மேல நம்பிக்கை வச்சு கொடுக்குற கதாபாத்திரங்களை சரியாக பண்ணி மக்களுக்கு பிடிக்க வைக்கணும். விருதுகளெல்லாம் எனக்கு ரெண்டாவது நம்பிக்கைதான். கலைத்தாய் எனக்கு பாடத்தை கத்துக் கொடுத்து இப்படியான மகுடத்தையும் கொடுக்கிறாங்க. அதை இன்னும் மெருகேத்தணும்னு நான் முயற்சி பண்றேன். இதுமட்டுமில்ல, ராதா ரவி அண்ணனும் என்னைக் கூப்பிட்டு பாராட்டினாரு. ‘டேய், எவ்வளவு பெரிய கதாபாத்திரத்தை பண்ணியிருக்க தெரியுமா!. போலீஸ் காரன் இப்படிதான் இருப்பான்’னு என்னோட கதாபாத்திரத்தை பாராட்டினாரு. அவர் பல படங்கள்ல வில்லனாக நடிச்சிருக்காரு. அதுமட்டுமில்லாம நடிகவேள் ஐயா குடும்பத்துல இருந்து வந்தவர், ராதா ரவி அண்ணன். அவர் இப்படியான பாராட்டைக் கொடுத்திருக்காரு. நான் ஒரு மூணு வருஷம் ராதா ரவி அண்ணன் வீட்டுலதான் வளர்ந்தேன். அவர்கிட்ட சாதரண ஆபீஸ் பாயாகதான் நான் இருந்தேன்.
ஓ.டி.டில படம் வந்ததும்தான் ராதா ரவி அண்ணன் பார்த்தாரு. அவர் ‘ படம் பார்த்ததும் வீட்டுல உன்னை பத்திலாம் சொன்னேன் டா’னு சொன்னாரு. இதைத் தாண்டி என்னை மாதிரி வாய்ப்புக்கு அதிகளவுல கஷ்டப்படுற நடிகர்களும், ‘ இத்தனை வருஷமாக ஓடிட்டே இருக்கோம்னு வலி இருந்தது. இப்படியான விஷயங்கள் மூலமாக எங்களுக்கு நீங்கதான் நம்பிக்கை கொடுக்கிறீங்க’னு சொன்னாங்க. இந்த கருத்துக்களை கேட்கும்போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. ” என்றவர், ” இப்போ முத்தையா சார் இயக்கத்துல உருவாகுற ‘சுள்ளான் சேது’ படத்துல நடிச்சிட்டு இருக்கேன். இதையெல்லாம் தாண்டி சில வாய்ப்புகளும் வந்திருக்கு. அது இன்னும் இறுதியாகல. ” என முடித்துக் கொண்டார்.