புதுடெல்லி,
மக்களவை தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருவதாகவும், இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் மத்திய அரசின் சமூகநீதித்துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்:
“மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை மாற்ற பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக ராகுல் காந்தி அடிக்கடி கூறி வருகிறார். இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி இந்த குற்றச்சாட்டுகளை பலமுறை மறுத்துள்ளார்,
ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக நான் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன். அவர் பா.ஜ.க. குறித்து இவ்வாறு பேசுவதை தடுக்க வேண்டும். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.