சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், விரைவில் மாணவர்களை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து அக்கட்சியின் சமூக வலைதள பக்கங்களில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
“தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்” என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூனில் தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைப்பாராட்டு, ஊக்கத்தொகை, பரிசு வழங்கும் விழாவை சென்னை – நீலாங்கரை பகுதியில் விஜய் நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கல்வி, அரசியல் விழிப்புணர்வு சார்ந்து அவர் பேசியிருந்தார். அதன் பிறகு கடந்த பிப்.2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மக்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்தான் ஒரே இலக்கு எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்திருந்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. எனவே, வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தவெக கட்சி கொடி தேர்வு, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நடிகர் விஜய் மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது.
குறிப்பாக, நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நாள் முதல், கட்சியின் மாநாடு மதுரையில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகின. அந்த வகையில், முன்பு வெளிவந்த தகவலின் படியே மதுரையில் நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தற்போதும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவர் விரைவில் மாணவர்களை சந்திக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.
விரைவில் நாம் சந்திப்போம்! pic.twitter.com/OUYZYhl5Ni
— TVK Vijay (@tvkvijayhq) May 10, 2024