Impact Player Rule IPL 2024: ஐபிஎல் தொடர் என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலம் ஆகிவிடுவார்கள். ஐபிஎல் தொடரை கொண்டாட கோடி பேர் உள்ள நிலையில், அதன் மீது விமர்சனம் வைக்கவும் பல கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட் அணியை சர்வதேச அளவில் பாதிப்பதாகவும், ஐபிஎல் தொடரில் விளையாடுவதை பார்த்து மட்டும் தேசிய அணிக்கு வாய்ப்பளிப்பது சரியில்லை போன்ற விமர்சனங்களை நீங்களும் கடந்திருப்பீர்கள்.
உலகெங்கும் கிரிக்கெட் பேட்டர்களுக்கான ஆட்டமாக உருமாறி வருவதாக குற்றச்சாட்டுகள் வந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் அது உரத்த குரலில் எழுந்துள்ளது. பேட்டர்களுக்கு மட்டுமே நடப்பு ஐபிஎல் சாதகமாக உள்ளது எனவும், பந்துவீச்சாளர்களுக்கு எவ்வித சாதகமும் இல்லை என்பது பலரின் கருத்தாக உள்ளது. மேலும் 200 ரன்களை ஒரு இன்னிங்ஸில் அடித்தாலே அது பெரிய ஸ்கோராக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 250 மற்றும் 270 ரன்களை சாதரணமாக அடிக்கின்றனர்.
இம்பாக்ட் பிளேயர்
பேட்டிங்கிற்கு இத்தனை சாதகமாக இருப்பதற்கு பல காரணிகள் இருந்தாலும், கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் வீரர் (Impact Player) விதியும் முக்கிய காரணமாகும். இந்த விதியால் ஒரு அணியில் மொத்தம் 12 வீரர்கள் விளையாடுகிறார்கள். மேலும், பேட்டிங் ஆர்டர் நீண்ட இருப்பதால் பேட்டர்கள் முதல் பந்தில் இருந்தே அதிரடியை கைக்கொள்ள தொடங்குகின்றனர். உதாரணத்திற்கு, கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளை சொல்லலாம்.
இதனால், இம்பாக்ட் வீரர் விதியை தூக்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் கூறி வந்தனர். சமீபத்தில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூட இம்பாக்ட் வீரர் விதி குறித்து எதிர்மறையாக கருத்து தெரிவித்தார். அந்த வகையில் இந்த விதி குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா (Jay Shah) இன்று தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
நிரந்தரம் இல்லை
இதுகுறித்து அவர்,”இம்பாக்ட் பிளேயர் விதி ஒரு சோதனை முயற்சியாக கொண்டு வரப்பட்டது. இதை நேர்மறையாக பார்த்தால், இது இரண்டு இந்திய வீரர்களுக்கு அணியில் விளையாடும் வாய்ப்பு கூடுதலாக கிடைக்கும். அதுவும் ஒரு அணியில் இரண்டு இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது முக்கியமல்லவா? ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இருப்பினும் இம்பாக்ட் விதி சரியில்லை என்று வீரர்கள் கருதினால், நாங்கள் அதைப் பற்றி கலந்தாலோசிப்போம. ஆனால், இதுபற்றி இதுவரை யாரும் எதுவும் புகார் கூறவில்லை. ஐபிஎல், டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு நாங்கள் ஒன்றுக்கூடி இதுகுறித்து ஆலோசிப்போம்.
உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு, வீரர்கள், அணியின் உரிமையாளர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம். இம்பாக்ட் வீரர் விதி நிரந்தரமானது இல்லை. இருப்பினும் அதில் பின்வாங்கிவிடுவோம் என்றும் நாங்கள் கூறவில்லை” என்றார்.