வருமானவரித்துறை அதிகாரிகள் போல நடித்து, தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்த 2 தி.மு.க. பிரமுகர்கள் உள்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம் அப்போது நம்மிடம் பேசியவர்கள், ‘சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜ்(55). இவர் பட்டாசு விற்பனை தொழில் செய்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் இவரின் வீட்டுக்கு காரில் வந்த இருவர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறியுள்ளனர். மேலும், முறையாக வருமானவரி செலுத்தாமல் சௌந்தர்ராஜ் முறைகேடு செய்ததாக கூறி அவரை பயமுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், வருமானவரி ஏய்ப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.50லட்சம் பணம் கேட்டுள்ளனர். மர்மநபர்களின் மிரட்டலால் பயந்துபோன சௌந்தர்ராஜ் தனது உறவினர் மூலம் ரூ.10 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு கிளம்பியவர்கள், மீதி பணத்தையும் வழங்குமாறு சவுந்தர்ராஜை செல்போனில் தொடர்பு கொண்ட தொடர்ந்து மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கடந்த புதன்கிழமை காலை சிவகாசி சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சௌந்தர்ராஜ் புகார் அளித்தார். இந்த புகாரின்மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், போலி அதிகாரிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்தும் சரக துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தனிப்படையினரின் விசாரணையில், வருமானவரித்துறை அதிகாரியாக நடித்து சௌந்தர்ராஜிடம் பணம் பறித்தது, சாத்தூர் கிழக்கு தி.மு.க. ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ், சுப்பிரமணி, கார் ஓட்டுநர் மகேஷ் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் மடக்கிப்பிடித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், மேலும் ஒருவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, தாயில்பட்டி கோட்டையூரை சேர்ந்த தி.மு.க. ஒன்றிய பிரதிநிதியான கருப்பசாமி என்பவரின் திட்டத்தின்படிதான், சுரேஷ் , சுப்பிரமணி, மகேஷ் ஆகிய மூவரும் சௌவுந்தர்ராஜிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து பணம் பறித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கருப்பசாமியிடம் தனிப்படையினர் விசாரணை நடத்துகையில், சௌந்தர்ராஜூம், கருப்பசாமியும் பள்ளிபருவம் முதலே நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், கருப்பசாமி கடந்த ஓராண்டுக்கு முன்னரே தனது நண்பர் சௌந்தர்ராஜிடம், ‘உன் மீது வருமான வரித்துறை சோதனை நடக்க உள்ளது, என்னிடம் ரூ.18 லட்சம் கொடுத்தால் உன்மீது வருமான வரித்துறை விசாரணை இல்லாமல் பார்த்து கொள்கிறேன்’ எனக்கூறியிருக்கிறார். இதற்கு சௌந்தர்ராஜ் மறுத்துவிடவும், ஆட்களை தயார் செய்து திட்டமிட்டு போலியாக வருமான வரித்துறை அதிகாரி போல ஆட்களை அனுப்பி சௌந்தர்ராஜிடம் பணம் பறித்தது’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கருப்பசாமி, சுரேஷ், சுப்பிரமணி, மகேஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88