வாக்குப்பதிவு சதவீதத்தில் முரண்பாடுகளா? – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து இருந்தார்.

வாக்குப்பதிவு புள்ளி விபரங்கள் அளிப்பதில் காலதாமதம் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதால், தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன என தேர்தல் ஆணையத்தை கார்கே அறிக்கை மூலமாக விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில், வாக்குப்பதிவு, தரவுகள் குறித்து விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது;

“வாக்குப்பதிவு சதவீதத்தில் முரண்பாடுகள் இருப்பதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. மல்லிகார்ஜுன கார்கேவின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரிக்கிறோம்.

ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறித்த தரவுகள் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடமும், அவர்களது வேட்பாளர்களிடமும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்ற விபரம் ஒவ்வொரு அரசியல் கட்சிகளிடமும், அவர்களது வேட்பாளர்களிடமும் இருக்கும்.

வாக்குகள் எண்ணும்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும், 17 சி படிவத்தில் இருக்கும் தரவுகளும் வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் முன் சரிபார்க்கப்படும். இதில் எந்தவிதமான முறைகேடுகளும் இல்லை.

இந்திய தேர்தல் முறையின் நம்பகத்தன்மையை இழிவுபடுத்தும் வகையில் தேசிய அரசியல் கட்சி பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளை கொடுப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல் விலகி இருப்பதுடன், கவனமுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.