ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் நாளை மறுநாள் சீராகும் என தகவல்

புதுடெல்லி,

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமம் கடந்த 2022-ம் ஆண்டு ஏர் இந்தியா மற்றும் அதன் அங்கமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை வாங்கியது. இதுதவிர, ஏ.ஐ.எக்ஸ். கனெக்ட் மற்றும் விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களும் டாடா குழுமம் வசம் உள்ளன.

இந்நிலையில் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைத்து ஒரு நிறுவனமாகவும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏ.ஐ.எக்ஸ். கனெக்ட் நிறுவனத்தை இணைத்து ஒரு நிறுவனமாகவும் மாற்றும் நடவடிக்கையை டாடா குழுமம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், நிர்வாகத்திடம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விமான ஊழியர்கள் ஒரே நேரத்தில், தங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று தகவல் தெரிவித்துவிட்டு விடுப்பு எடுத்தனர். இதையடுத்து பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. உடனடியாக அதன் ஊழியர்கள் 25 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்தது. இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களிடம் நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களில் ஒரு பகுதியினர் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட 25 ஊழியர்களின் பணி நீக்க ஆணையைத் திரும்ப பெறுவதாகவும் நிர்வாகம் தெரிவித்தது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தினந்தோறும் சராசரியாக 120 சர்வதேச விமானங்களையும், 260 உள்நாட்டு விமானங்களையும் இயக்கி வருகிறது. இந்நிலையில் ஊழியர்களின் போராட்டம் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 260-க்கும் மேற்பட்ட விமான சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது.

தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) 75 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை 45 முதல் 50 விமானங்கள் வரை ரத்து செய்யப்படலாம் எனவும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமான சேவைகள் சீராக இயங்கத் தொடங்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.