பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் லீலைகளை அம்பலப்படுத்திய பாஜக தலைவர் தேவராஜ் கவுடா மீது பாலியல் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஹாசன் தொகுதியின் ஹோலேநரசிபுரா டவுன் காவல் நிலையத்தில் தேவராஜ் கவுடா மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோதி என்ற பெண் தன்னை ஜி தேவராஜே கவுடா மற்றும் பலர் உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மிரட்டியதாகவும் கூறியதை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். ரேவண்ணாவின் மகன். கடந்த 26-ம் தேதி நடந்த மக்களவை 2-ம் கட்ட தேர்தலில், இவர் ஹாசன் மக்களவை தொகுதியிலிருந்து தே.ஜ.கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ ஒன்று வெளியானது. அதில் உள்ள பெண், பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை தனக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தொந்தரவு செய்ததாக அவர் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் ஹாசன் மாவட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவகாரம் குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதியே கர்நாடக பாஜக தலைவர்களில் ஒருவர் தான் இந்த தேவராஜ் கவுடா என்பவர், அக்கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியதை தற்போது காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், “பிரஜ்வல் ரேவண்ணா உட்பட தேவகவுடா குடும்பத்தின் பல தலைவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் லீலைகள் அடங்கிய 2,976 வீடியோக்கள் கொண்ட பென் டிரைவ் உள்ளது. இதில் சிக்கியுள்ள சில பெண்களில் அரசு அதிகாரிகளும் அடங்குவர்.
இந்த வீடியோக்களை கொண்டு அவர் பெண்களை தொடர்ந்து பாலியல் மிரட்டல் செய்து வந்துள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து, மக்களவைத் தேர்தலில் ஹாசனில் பிரஜ்வல் ரேவண்ணாவை வேட்பாளராக முன்னிறுத்தினால் இந்த வீடியோக்கள் பிராமாஸ்திராமாக தேர்தலில் பயன்படுத்தப்படலாம்.
ஏனென்றால், இந்த வீடியோக்களின் இன்னொரு காப்பி காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்துள்ளது. எனவே, அவர்களுடன் இணைந்தால் நாமும் கறைபடிந்து விடுவோம். ஒரு பாலியல் குற்றவாளியின் குடும்பத்துடன் இணைந்த கட்சி என்ற பெயருடன் தேசிய அளவில் நமது கட்சியின் நற்பெயருக்கு பெரும் அடி கிடைக்கும்” என்று எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கையும் மீறியே மோடியும், அமித் ஷாவும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளனர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.