சி.டி.ஆர்.நிர்மல்குமார், தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க
“உண்மையைச் சொல்லியிருக்கிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 500-க்கும் அதிகமான வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது தி.மு.க. `நாங்கள் ஆட்சிக்கு வந்ததுமே நீட் தேர்வை ரத்துசெய்வோம்’ என்றார்கள். `அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியம், பணி நிரந்தரம்’ என்று வாய்க்கு வந்த அனைத்தையும் வாக்குறுதிகளாக வாரி வழங்கினார்கள். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று வருடங்கள் ஆகின்றன. கொடுத்த வாக்குறுதி எதையுமே இதுவரை நிறைவேற்றவில்லை. திறனற்ற தி.மு.க அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி, பல்வேறு அரசுத் துறையினர் போராட்டம் நடத்துவதை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். மக்களுக்குப் பலன் தரும் வகையில் புதிய திட்டம் எதையும் கொண்டுவரவும் தி.மு.க அரசு மொத்தமாகத் தவறிவிட்டது. அதுமட்டுமல்லாமல், `தாலிக்குத் தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் என்று அ.தி.மு.க ஆட்சியில் இருந்த மக்கள் நலத் திட்டங்களுக்கும் மூடு விழா கண்டிருக்கிறது. நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத்தொகை திட்டங்களையும்கூட அனைவருக்கும் செய்து தராமல், பெயருக்குச் செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது இந்த அரசு. இனி தி.மு.க-வை ஒருபோதும் மக்கள் நம்பப்போவதில்லை!”
சிவ.ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க
“அர்த்தமற்ற விமர்சனம். கழக ஆட்சி ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகின்றன. மகளிர் உரிமைத்தொகை தொடங்கி தி.மு.க கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியையும் தமிழக அரசு நிறைவேற்றிவருகிறது. கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமன்றி, பெண்களுக்கு இலவசப் பேருந்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் கழக அரசு செய்துவருகிறது. ஆனால், பாதம் தாங்கி பழனிசாமி, ஆட்சிக்காலம் முழுவதும் ஒன்றிய பா.ஜ.க அரசின் அடிமையாகவே இருந்து, ஒன்றிய அரசு கொண்டுவந்த மக்கள் விரோதச் சட்டங்களுக்கு ஆதரவு கொடுத்தவர். வாக்குறுதி குறித்துப் பேச பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது… தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற திலிருந்து மாநிலத்தில் வளர்ச்சி அதிகரித்திருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே சொல்கின்றன. அ.தி.மு.க ஆட்சியின் ஊழலுக்கு பயந்து வெளி மாநிலங்களுக்குச் சென்ற நிறுவனங்கள் அனைத்தும் தற்போது தமிழகத்தை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. மேலும், பல சர்வதேச நிறுவனங்கள் தமிழகத்துக்குப் படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், எதிர்க்கட்சியாகக் குற்றம் சொல்ல வேண்டுமென்று வாய்க்கு வந்ததை உளறிக்கொண்டிருக்கிறார் பழனிசாமி!”