சென்னை: ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரைக்கு அனுமதியளிக்க வேண்டி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை கமிட்டி சார்பில் அதன் தலைவர் சாமுவேல் திரவியம் மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் நேற்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை சந்தித்து மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஜோதி அவரது நினைவு நாளில், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தொடங்கி அவரது பிறந்த நாளில் டெல்லிக்கு தரைவழியாக எடுத்துசெல்வது வழக்கம்.
தமிழகத்தில் இருந்து 3-வது ஆண்டாக மே 15-ம் தேதி காலை 9 மணிக்கு கன்னியாகுமரி ரவுண்டானா அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலையில் இருந்து தொடங்கி 44 மாவட்டங்கள் வழியாக பெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு மே 21-ம்தேதி காலை வந்தடையும்,
அதன்பிறகு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் முன்னணி தலைவர்கள் முன்னிலையில் ஒப்படைத்து மரியாதை செலுத்தப்படும். இந்த ஜோதி காங்கிரஸ் நிர்வாகிகள் 50 பேருடன், 5 வாகனங்களில் தரைவழி மார்க்கமாக 44 மாவட்டங்கள் வழியாக கடந்து செல்வதற்கு அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.