வென்றே ஆக வேண்டிய கட்டத்தில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. பௌலிங், பீல்டிங், பேட்டிங் என மூன்று விஷயங்களிலுமே சென்னை அணி சொதப்பியிருக்கிறது.
குஜராத் அணியின் சார்பில் சுப்மன் கில்லும் சாய் சுதர்சனும் மிரட்டலாக சதமடித்து போட்டியை சென்னை அணியின் கையிலிருந்து தட்டிப்பறித்திருந்தனர். இந்நிலையில், தோல்விக்குப் பிறகு சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். அப்போது தோல்விக்கான காரணங்கள் குறித்து விளக்கமாக பேசியிருந்தார்.
அவர் பேசியவை, “பிளான் A வொர்க் அவுட் ஆகவில்லை எனும்போது பிளான் B, பிளான் C-க்குச் சென்றுவிட்டோம். இனி பிளான் D-யும் வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். சாய் சுதர்சனும் சுப்மன் கில்லும் அதி உயர் தரத்திலான கிரிக்கெட்டை ஆடிச் சென்றிருக்கிறார்கள். முதல் ஓவரிலிருந்தே சிறப்பாக ஆடினார்கள். பிட்ச் கொஞ்சம் ஸ்பின்னுக்கு உதவும் என நினைத்தோம்.
ஆனால், பந்து கொஞ்சம் நின்று வந்ததே தவிர திரும்பவே இல்லை. நாங்கள் எங்களின் திட்டங்களை இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தியிருக்க வேண்டும்.
எங்களின் ஃபீல்டிங் வழக்கத்தை மீறி சுமாராக இருந்தது. கேட்ச்களை ட்ராப் செய்தோம். மிஸ் ஃபீல்டிங் நடந்தது. அது எங்களுக்குப் பெரிய பின்னடைவாக இருந்தது.
நாங்களும் ஆட்டத்தின் சில இடங்களில் ஆதிக்கம் செலுத்தினோம். குறிப்பாக, சேஸிங்கை ஒரு கட்டத்தில் நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றோம். ஆனால், மோகித் சர்மா மிகச் சிறப்பாக வீசி எங்களைக் கட்டுப்படுத்திவிட்டார். மேலும், குஜராத் பௌலர்கள் நிறைய ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசினர். அதுவும் ஆட்டத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.
நாங்கள் சில பௌலர்களை இழந்திருப்பது ஒரு கை உடைந்ததைப் போல இருக்கிறது. ஆனாலும் இன்றைய போட்டியில் ஆடிய பௌலர்கள் கடந்த போட்டியில் நன்றாக செயல்பட்டவர்களே! நல்ல நம்பிக்கையுடனேயே ஆட்டத்திற்குள் வந்தனர். ஆனால், இப்படி இரண்டு பேட்டர்கள் ஆடும்போது அது உங்களுக்கு ஒரு தனி அழுத்தத்தை கொடுத்துவிடும். இறுதியில் ஷர்துல் தாக்கூர் நன்றாக வீசினார். அந்த கடைசி 4 ஓவர்களில் அவர்களைக்ப் கொஞ்சம் கட்டுப்படுத்தினோம்.
சாய் சுதர்சனை பார்க்கும்போதே எனக்கு கொஞ்சம் அயர்ச்சியாகிவிடுகிறது. கடந்த சீசனிலும் இறுதிப்போட்டியில் எங்களுக்கு எதிராக நன்றாக ஆடி 96 ரன்களை அடித்தார்.
இன்றைய போட்டியின் தொடக்கத்தில் லாங் ஆபில் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டிருந்தார். ஒரு இன்னிங்ஸை சிறப்பாகத் தொடங்குவதற்கான அற்புதமான ஷாட் அது. சாய் சுதர்சன் அபாரமான வீரராகத் தெரிகிறார். உயர் தரத்தில் கிரிக்கெட் ஆடுகிறார். சென்னையுடனும் அவருக்கு நல்ல தொடர்பு இருக்கிறது” என்றார்.