சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2024ன் முக்கியமான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்து உள்ளது. இந்த போட்டிக்கு முன்பு வரை சென்னை அணி பிளேஆஃப்க்கு தகுதி பெரும் வாய்ப்பை நன்றாக வைத்து இருந்தனர். ஆனால் நேற்று நடைபெற்ற போட்டியில் 35 ரன்கள் தோல்விக்கு பிறகு பிளே ஆப் கனவு சற்று கடினம் ஆகி உள்ளது. சென்னை அணி தோல்வி அடைந்துள்ளதால் புள்ளிகள் பட்டியலில் கீழே உள்ள சில அணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னை அணியின் தோல்வியால் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பிளேஆஃப்களுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது 12 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் உள்ளது. அவர்கள் முதல் 8 போட்டிகளில் 7 ஆட்டங்களில் தோல்வியடைந்தனர். அதன் பிறகு தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தற்போது வெற்றி பெற்றுள்ளனர். கடைசி இரண்டு போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான விளையாட உள்ளனர். இந்த இரண்டு போட்டிகளிலும் ஆர்சிபி வெற்றி பெற வேண்டும். இதன் மூலம் 14 புள்ளிகளுடன் பிளே ஆப்க்கு செல்ல வாய்ப்பு உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் 16 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் தற்போது உள்ளது. அவர்களுக்கு இன்னும் 2 ஆட்டங்கள் மீதமுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபிக்கு எதிராக இன்னும் இரண்டு ஆட்டங்களில் விளையாட உள்ளது. இதில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும் பிளே ஆப் வாய்ப்பை இழக்க நேரிடும். இது ஆர்சிபி அணிக்கு சாதகமாக அமையும்.
சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் 14 புள்ளிகளுடன் இருந்தாலும், நிகர ரன் ரேட் விகிதம் அதிகமாக இருந்தால் பிளேஆப்க்கு தகுதி பெற முடியும். ஆர்சிபி அணிக்கு இருக்கும் இன்னொரு நல்ல செய்தி என்னவென்றால் அவர்களின் நிகர ரன் விகிதம் தற்போது +0.22 ஆக உள்ளது. இது டெல்லி மற்றும் லக்னோ அணியைவிட அதிகமாக உள்ளது. இருப்பினும் லக்னோ, டெல்லி அல்லது சென்னை ஆகிய மூன்று அணிகளில் ஏதேனும் ஒரு அணி 16 புள்ளிகளை பெற்றாலும் ஆர்சிபி வெளியேறிவிடும்.