புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் வெள்ளிகிழமை விடுதலையான பின்னர், இன்று (சனிக்கிழமை) அவர் தனது மனைவி சுனிதா கேஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோருடன் கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோயிலில் பிரார்த்தனை செய்தார்.
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில், அவருக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 2-ம் தேதி நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா கேஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோவிலில் பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து கேஜ்ரிவால் இன்று ரோடு ஷோ நடத்தவிருக்கிறார். டெல்லி முதல்வருடன் சவுரப் பரத்வாஜ், அதிஷி, கோபால் ராய் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர்களும் உடனிருந்தனர்.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் கனாட்பிளேஸில் உள்ள ஹனுமான் கோயிலுக்குச் சென்றார். பின்னர் பிற்பகல் 1 மணியளவில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
இதையடுத்து, தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் மாலை 4 மணிக்கு ரோடு ஷோ மேற்கொள்கிறார். அதோடு, மாலை 6 மணிக்கு கிழக்கு டெல்லி கிருஷ்ணா நகரில் ரோடு ஷோ மேற்கொள்கிறார். கேஜ்ரிவாலின் பிரச்சாரத்தை கட்டுப்படுத்தவே அவர் சிறைக்கு அனுப்பப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி விமர்சித்த நிலையில் இன்று முதல் அவர் முழுவீச்சில் பிரச்சாரம் செய்யவிருப்பது கவனிக்கத்தக்கது.