ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஒரு போட்டியில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஒரு முக்கியமான போட்டியை ரிஷப் பந்த் தவறவிட உள்ளார். இந்த தடையால் டெல்லி அணியின் பிளேஆஃப் வாய்ப்புகளும் கேள்விக்குறி ஆகி உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவுலிங் செய்ய அதிக நேரம் எடுத்து கொண்ட குற்றத்திற்காக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஒரு போட்டிக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுமட்டுமின்றி போட்டி கட்டணத்தில் இருந்து ரூ. 30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்தியன் பிரீமியர் லீக்கின் 56வது போட்டியின் போது டெல்லி அணி மெதுவான ஓவர் ரேட்டைப் பராமரித்ததால், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ரிஷப் பந்த் அபராதம் மற்றும் ஒரு போட்டிக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். நாளை ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் டெல்லி அணியின் முக்கியமான ஆட்டத்தில் பந்த் விளையாடமாட்டார். ஐபிஎல் பிளே ஆப்க்கு தகுதி பெற இன்னும் டெல்லி அணிக்கு வாய்ப்புள்ள நிலையில் பிசிசிஐன் இந்த செயல் அணிக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
Rishabh Pant suspended for a match and fined 30 Lakhs for maintaining slow overrate. ic.twitter.com/wpbUXd48nc
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 11, 2024
“ஐபிஎல் நடத்தை விதி 8ன் படி, டெல்லி கேபிடல்ஸ் மேட்ச் ரெஃப்ரியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இதைத் தொடர்ந்து, மேல்முறையீடு பிசிசிஐ ஒம்புட்ஸ்மேனுக்கு மறுபரிசீலனை செய்யப்பட்டது. இதனை ஒம்புட்ஸ்மேன் ஆன்லைனில் விசாரணையை நடத்தி உறுதிப்படுத்தினார். மேட்ச் ரெஃப்ரியின் முடிவே இறுதியானது மற்றும் அதனை மாற்ற முடியாது” என்று பிசிசிஐ தனது செய்திக்குறிப்பில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஐபிஎல் லீக் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இருக்கும் டெல்லி அணி பிளே ஆப்க்கு தகுதி பெற பந்த் முக்கியமான ஒரு வீரர். குறிப்பாக ஐபிஎல் 2024ன் தொடக்கத்தில் சில தோல்விகளை சந்தித்தாலும் அக்சர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்துடன் டெல்லி அணி அடுத்தடுத்த போட்டிகளை வென்றுள்ளது. இவர்களை கேப்டன் பந்த் சரியாக வழிநடத்தி போட்டிகளை வென்று வருகிறார். கடந்த மாதம் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியை வெறும் 89 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
தற்போது புள்ளி பட்டியலில் டெல்லி அணி 5வது இடத்தில் உள்ளது. மேலும், சென்னை, லக்னோ மற்றும் டெல்லி அணிகள் ஒரே பாயிண்ட்ஸ் பெற்று இருந்தாலும் NRR அடிப்படையில் 5வது இடத்தில் உள்ளது. டெல்லி அணிக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் மீதமுள்ள. நாளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக ஒரு போட்டியும், லக்னோ அணிக்கு எதிராக ஒரு போட்டியும் உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெரும் பட்சத்தில், மற்ற அணிகள் தோல்வி அடைந்தால் டெல்லி அணி பிளே ஆப்க்கு தகுதி பெற வாய்ப்புள்ளது.