பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது என கூறி நாட்டை அச்சுறுத்தியது காங்கிரஸ் கட்சி: பிரதமர் மோடி

புல்பானி,

ஒடிசாவின் புல்பானி நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என்ற எண்ணம் நாட்டு மக்களுக்கு வந்துள்ளது. அதனால், மக்களவை தேர்தலில் பா.ஜ.க. சாதனை படைக்கும் என்று பேசியுள்ளார்.

2014 மற்றும் 2019 தேர்தல்களில் பேசியது போன்றே நடப்பு 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் இளவரசர் (ராகுல் காந்தியை குறிப்பிட்டு) பேசி வருகிறார். இந்த தேர்தலில், மொத்த தொகுதிகளில் 10 சதவீதம் அளவுக்கு கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது. 50 தொகுதிகளுக்கும் குறைவான இடங்களிலேயே வெற்றி பெறும்.

அதனால் மக்களவையில், எதிர்க்கட்சி என்ற மதிப்பையும் இழக்கும் என்று பேசினார். அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசின்போது, பொக்ரானில் அணு சக்தி சோதனைகளை இந்தியா மேற்கொண்டது. காங்கிரஸ் கட்சியோ, பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது என தொடர்ந்து கூறி நாட்டை அச்சுறுத்தி வந்தது.

பாகிஸ்தானின் நிலையோ தற்போது, அணுகுண்டை பராமரிக்க கூட பணம் எதுவும் இல்லாமல் உள்ளது. பயங்கரவாதிகளுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்து கொண்டுள்ளது என குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, பயங்கரவாத எதிர்ப்பு, வாக்கு வங்கியில் இழப்புக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை அக்கட்சி கொண்டுள்ளது என்றும் கடுமையாக சாடியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.