கொடைக்கானலிலுள்ள சித்த மருத்துவராக இருக்கும் சதாசிவ பாண்டியனுக்கும் (அர்ஜுன் தாஸ்), அதே ஊரிலுள்ள ஓர் உணவகத்தின் மேலாளராக பணிக்குச் சேரும் சூர்யாவுக்கும் (தன்யா ரவிசந்திரன்) காதல். இந்தச் சூழலில் கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் பெற்று வரும் காவல் ஆய்வாளர் பரசுராஜ் (சுஜித் சங்கர்) இவர்களின் காதலைப் பிரிக்க நினைக்கிறார், அர்ஜுன் தாஸைக் கண்டாலே வெறுக்கிறார். அவரின் செயலுக்கான காரணம் என்ன, இவர்கள் மூவரின் பின்னணி என்ன என்பதை பிளாஷ்பேக் குவியல்களால் பேசி இருக்கிறது இந்த `ரசவாதி’.
கந்தர்வ குரல், மரங்களின் மீது காருண்யம், எதையும் சாந்தமாக அணுகும் பேச்சு என பேன்ட் சர்ட் போட்ட ஞானியாக அர்ஜுன் தாஸ். தத்துவங்கள் போடும் இடங்களில் நடிப்பு சிறப்பாக இருந்தாலும் உணர்வுபூர்வமான காட்சிகளில் எமோஷன் மிஸ்ஸிங். சண்டைக் காட்சிகளில், கோபமான ஷாட்களில் மட்டும் அந்த நடிப்பில் நம்பகத்தன்மை கூடிவிடுகிறது. நாயகி தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் பெரிதாக ஈர்க்கவில்லை. மற்றொரு நாயகியாக இரண்டாம் பாதியில் வந்து போகும் ரேஷ்மா வெங்கடேசன் கொடுக்கப்பட்ட திரை நேரத்தில் சற்றே பாஸ் மார்க் வாங்குகிறார். சிதைவடைந்த மனநிலையில் அனைவரின் மீதும் எரிந்துவிழும் சுஜித் சங்கர், தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். இருந்தும் ஒரு சில இடங்களில் செயற்கைத்தனம் ஆங்காங்கே எட்டிப்பார்க்கிறது. துணைக் கதாபாத்திரங்களாக வரும் ஜி.எம்.குமார், ரிஷிகாந்த் ஆகியோரின் நடிப்பில் குறையேதுமில்லை. மனநல மருத்துவராக வரும் ரம்யாவின் நடிப்பு ஓவர்டோஸ்!
பைன் மரங்கள், கொடைக்கானல் மலை என இயற்கை எழிலைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் சரவணன் இளவரசுவின் கேமரா, ஒரு சில இடங்களில் காட்சி கோணங்களில் சம்பிரதாயமாக இசைந்திருக்கிறது. தமன் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் பின்னணி இசையில் நல்லதொரு தாக்கத்தை விட்டுச் செல்கிறார். டைட்டிலில் வரும் அந்த ‘தை தை ஃப்யூசன்’ இசை இரண்டாம் பாதியில் பாடல் மான்டேஜுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் மேக்கிங்கும் ரசிக்க வைக்கிறது. படத்தொகுப்பாளர் சாபு ஜோசப் வளவளவென மலையேறும் இரண்டாம் பாதிக்கு ரெட் சிக்னல் கொடுத்திருக்கலாம்.
ஒரு கொலை, அது எதற்காக நடந்தது என்பதைச் சொல்லாமல் சுவாரஸ்யமாக ஆரம்பிக்கும் கதை, சட்டென 10 ஆண்டுகள் கழித்து மற்றொரு இடத்துக்கு நகர்கிறது. அங்கே கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக அறிமுகம் செய்து பொறுமையாக நகர்கிறது திரைக்கதை. ஆனால் அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டும் எந்தக் கதாபாத்திரத்தின் மீதும் பிடிப்பு உண்டாகவே இல்லை. கதாநாயகன் எவ்வளவு நல்லவன் தெரியுமா, வில்லன் எவ்வளவு மோசமானவன் தெரியுமா என்பதை மீண்டும் மீண்டும் நிறுவ கொடைக்கானல் கொண்டை ஊசி வளைவுகளில் சுற்றிச் சுற்றி நம்மை ஓடவிட்டிருக்கிறார்கள்.
‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’, ‘தலைக்கவசம் உயிர்க்கவசம்’ என்கிற தொனியில் வரும் சமூக விழிப்புணர்வு வசனங்கள் நல்ல எண்ணத்தில் வைக்கப்பட்டவை என்றாலும் வாட்ஸ்அப் பார்வேர்டு கணக்காக அதைக் காட்சிக்குக் காட்சி சொருகிக் கொண்டே இருப்பது நெருடல். இந்த க்ரைம் கதைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் சாரே?! ஆனால் கதையின் முக்கிய கருவாக இருக்கும் ‘பால்ய பருவ அதிர்ச்சியினால் ஏற்பட்ட மனசிதைவை’ எந்தவித முதிர்ச்சியும் கையாண்டிருக்கிறார். மனநல மருத்துவராக வந்து காமெடி செய்யும் ரம்யாவின் பாத்திரம் ஆரம்பத்தில் சிரிக்க வைத்தாலும் அதன் பிறகு தியேட்டரிலேயே பார்வேர்டு பட்டனைத் தேட வைக்கிறது.
நாயகன் ஏதேதோ மூலிகை வேர்களைத் தேடுகிறார், மரத்தோடு பேசுகிறார், பாம்பைப் பார்த்துப் பயப்படாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என ‘சந்திரமுகி’ பாம்பு கணக்காக நீளும் காட்சிகள் பொறுமையைச் சோதிக்கவே செய்கின்றன. இரண்டாம் பாதி பிளாஷ்பேக்கும் மலையை குடைகிறார்கள், நண்பனின் சாவு என எங்கெங்கோ விலகிச் சென்று அவசர கதி டிராக்காகக் கடந்து போகிறது. நான்கு வருடங்களுக்கு முன்னர் நடக்கும் கதை என்பதால், க்ளைமாக்ஸில் கொரோனாவுக்கு மருந்து கபசுரக் குடிநீர் என்ற பிரசாரம் எல்லாம் டப்பிங்கில் திணிக்கப்பட்ட ஒன்றாகவே வெளிப்படுகின்றன.
ஒட்டுமொத்தமாக, சுற்றி நடக்கும் சம்பவங்கள் ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது என்பதைக் கருவாக எடுத்துப் பேசும் இந்த `ரசவாதி’, கதாபாத்திர தெளிவின்மையாலும் மோசமான திரைக்கதையாலும் ரசனையில்லா வாதியாகிறான்.