புதுச்சேரி: “புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவின் பின்னடைவு, அரசின் செயலின்மையைக் காட்டுகிறது” என்று அம்மாநில எதிர்கட்சித் தலைவர் சிவா விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி மாநிலம் கல்விக்கு முதலிடம் கொடுத்த மாநிலம் என்று பெயர் பெற்றது. இந்தியாவிலேயே 100 சதவீதம் எழுத்தறிவு உள்ள மாநிலமாக 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிவிப்பு செய்யப்பட்ட மாநிலம் புதுச்சேரி. புதுச்சேரியில் 10 மற்றும் 12–ம் வகுப்பு தேர்வுகளில் மாணவர்கள் அபரிவிதமான மதிப்பெண்களை பெற்று, குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறிய வரலாறுகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகால தேர்வு முடிவுகள் மிக மோசமான பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
நேற்று வெளியிடப்பட்ட 10–ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், கடந்த வாரம் வெளிவந்த 12–ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் இதற்கு உதாரணங்கள். பத்தாம் வகுப்புத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் பெற்ற 78.08 சாதவீதம் என்பது நாம் தலைகுனிய வேண்டிய தேர்வு முடிவாகும். சென்ற ஆண்டு பெற்ற விகிதாச்சாரத்தைவிட இது 2.75 சதவீதம் குறைந்ததாகும்.
அதேபோல் 100 சதவீத வெற்றி என்பது 108 அரசுப் பள்ளிகளில் வெறும் 8 பள்ளிகள் மட்டுமே பெற்றிருப்பதும், காரைக்கால் மாவட்டம் மிகவும் பின்தங்கி 65.31 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பதும் புதுச்சேரி அரசின் கையாளாகத்தனத்தை சுட்டிக்காட்டி இருப்பதுடன், கல்வியின் அடிப்படை கட்டமைப்பில் விரிசல் ஏற்பட்டிருப்பதை வெளிச்சம்போட்டு காட்டி இருக்கிறது.
இதே நிலைமைதான் 12–ம் வகுப்பு தேர்விலும் எதிரொலித்து இருக்கிறது. 55 அரசுப் பள்ளிகளில் ஒரே ஒரு பள்ளிதான் 100 சதவீதம் பெற்று புதுச்சேரி அரசின் கல்வித்துறையின் கவுரவத்தை காப்பாற்றி உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் கல்விக்கேந்திரமான புதுச்சேரி மிகவும் பின்னடைவை சந்திக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்தால் அது உயர்க்கல்வியை பெரிதும் பாதிக்கும். பல மாணவர்கள் படிப்பை தொடராமல் போய்விடுவார்கள். இதனை தடுப்பதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோல்வியுற்ற மாணவர்களை அரசு கண்காணித்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து மறு தேர்வு எழுதிட வழிவகை செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற தேர்ச்சி விகித குறைபாடுகளை போக்குவதற்கு முதல்வர் கமிட்டி அமைத்து ஒவ்வொரு பள்ளியையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
எங்கெல்லாம் வகுப்பு நடத்தப்படவில்லை, வகுப்பு நடத்தியும் ஏன்? தேர்ச்சி சதவீதம் குறைந்தது என்பதை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வில்லியனூர் தொகுதியில் ஆசிரியர் பற்றாக்குறை பற்றியும், மாநிலம் முழுவதும் இதே நிலை இருப்பதை தொடர்ந்து சொல்லி வந்தோம்.
ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை. அதன் காரணமாக கடந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற சுல்தான்பேட்டை அரசுப் பள்ளி 10 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. இதே நிலை தான் புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, புதுச்சேரி மாநிலத்தில் பொதுத்தேர்வு சதவீதம் குறைவு என்பது தோல்வியுற்ற மாணவர்களின் எதிர்காலத்தை சிதறடிக்கும் என்பதை இவ்வரசு இனியாவது உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும். அதே நேரத்தில் வரும் கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சிக்கு உண்டான ஆயத்த பணிகளை கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.